“முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் #TrillionDollarTN கனவு நனவாகும்” - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா!
“முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தமிழ்நாட்டில் 100 சதவீதம் முதலீடாக மாறி, மாநிலத்தில் பரவலான வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தருவது நிச்சயம்” என தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கு அரசு முறை பயணமாக சென்று தமிழ்நாட்டுக்கு ரூ.7,616 கோடி முதலீட்டுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை திரும்பினார். தாயகம் திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை விமான நிலையத்தில் அமைச்சர்கள் வரவேற்றனர். இந்நிலையில், சான்பிரான்சிஸ்கோவிலும், சிகாகோவிலும் மேற்கொள்ளப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தமிழ்நாட்டில் 100 சதவீதம் முதலீடாக மாறி, மாநிலத்தில் பரவலான வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தருவது நிச்சயம் என அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது;
“இந்தியாவின் நம்பர் 1 முதலமைச்சர் என அனைவராலும் போற்றப்படும் திராவிட_நாயகன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலுடன், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான நமது அரசின் அமெரிக்க பயணம் வெற்றிகரமாக நிறைவேறியிருக்கிறது.
இந்த பயணத்தில் 7616 கோடி ரூபாய் புதிய முதலீடாக ஈர்க்கப்பட்டு , 11,516 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MOU) போடப்பட்டுள்ளன. இதற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று உலக புகழ்பெற்ற ஃபோர்டு நிறுவனம் தனது உற்பத்தி ஆலையை மீண்டும் துவங்கப் போவதாக அறிவித்துள்ளது.
இன்னும் கூடுதலான முதலீடும், அதிகம் பேருக்கான வேலை வாய்ப்புகளும் உறுதி செய்வதற்கான முதல் கட்ட பணிகளை முடித்துவிட்டு வந்திருக்கிறார் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். வெகு விரைவில் மேலும் பல முதலீடுகள் வந்து குவிய இருக்கின்றன என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும்.
மீண்டும் சொல்கிறேன் இது ஆரம்பம் மட்டுமே. இப்பயணத்தின் போது முதலீடுகள் செய்ய முன்வந்த அனைவருடனும் நாம் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடவில்லை. யார், யார் உறுதியாக பணியை துவக்குவார்கள் என்பதை பல வகையில் உறுதி செய்து, அதன் மூலம் தமிழ்நாட்டுக்கு பரவலாகப்பட்ட வளர்ச்சி உறுதி செய்யப்படுமா என்பதையும் கவனத்தில் கொண்டு தான் ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. ஆகையால் தான் முதலமைச்சர் சொல்வதைப் போல இந்த பயணத்தின் அனைத்து ஒப்பந்தகளும் 100% நிறைவேற்றப்படும் வாய்ப்புகள் மிகப் பிரகாசமாக உள்ளது.
எதிர்க்கட்சிகளில் சிலர், ஏன் இன்னும் அதிகப்படியான முதலீடுகளை ஈர்க்கவில்லை என்று கேள்விகளை எழுப்புகிறார்கள். உலக முதலீட்டாளர் மாநாட்டில் 6 லட்சத்து 64 ஆயிரம் கோடிக்கு MOU போடப்பட்ட பொழுதும் ஏன் 10 லட்சம் கோடிக்கு போடவில்லை என்று அவர்கள் அரசியல் செய்தார்கள் : ) பக்கத்து மாநிலங்களை சுட்டிக்காட்டி அந்த அளவுக்கு ஏன் இங்கு முதலீடு ஈர்க்கப்படவில்லை என்றும் கேட்கிறார்கள். நமது முதலமைச்சரைப் பொறுத்தவரை புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் மதிப்பு எவ்வளவு என்பதை விட அவை எந்த அளவிற்கு முதலீடாக மாற்றப்பட்டு, தமிழ்நாட்டில் பரவலான அளவில் நமது மக்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாகும் என்பதில்தான் மிகுந்த கவனமாக இருக்கிறார் !
எனவே தான் முதலீடாக மாறும் உறுதித் தன்மை கொண்ட நிறுவனங்களுடன் மட்டுமே ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இன்னும் பல நிறுவனங்கள் முதலீடு செய்ய தயாராக இருந்த நிலையிலும் அவற்றின் உறுதித்தன்மை குறித்த கூடுதல் விவரங்களை பெற்று, அதன் பின்னர் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடலாம் என பரிசீலனையில் வைக்கப்பட்டுள்ளன. அமெரிக்க பயணத்தில் சான்பிரான்சிஸ்கோவிலும், சிகாகோவிலும் மேற்கொள்ளப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தமிழ்நாட்டில் 100 சதவீதம் முதலீடாக மாறி, மாநிலத்தில் பரவலான வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தருவது நிச்சயம்.
இந்தியாவின் முதன்மை முதலமைச்சரான திராவிட நாயகர் அதனை சாதித்துக் காட்டுவார். அவரது #TrillionDollarTN கனவு நனவாகும்”
இவ்வாறு தொழிற்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார்.