"பத்திரிகை சுதந்திரம் நெரிக்கப்படக்கூடாது" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
இந்தியாவின் முன்னணி இணைய தள செய்தி நிறுவனமான ’தி வயர்’ இன்று (மே 9) அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையில், "மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உத்தரவுகளின் படி எங்கள் வலைதளம் முடக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். இதனை சரிசெய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் செய்து வருகிறோம். உங்கள் ஆதரவுடன் கடந்த 10 ஆண்டுகளாக எங்கள் பணியைத் தொடர்ந்து செய்து வருகிறோம். இந்த நேரத்தில் நாங்கள் அனைவரும் ஒன்றாக நிற்போம் என்று நாங்கள் நம்புகிறோம். எங்கள் அனைத்து வாசகர்களுக்கும் உண்மையுள்ள செய்திகளை வழங்குவதில் இருந்து நாங்கள் பின்வாங்க மாட்டோம்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
தி வயர் இணைய தளம் முடக்கப்பட்டதற்கு பல்வேறு ஊடகவியலாளர்களும், அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,
"ஒரு முக்கியமான கட்டத்தில் ஊடகங்களை அமைதிப்படுத்துவது ஜனநாயகத்தின் உணர்வைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகும். மத்திய அரசு மறுபரிசீலனை செய்து 'The Wire' மீதான தடையை நீக்கும் என்று நம்புகிறேன். உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தில் பத்திரிகை சுதந்திரம் நெரிக்கப்படக்கூடாது"
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.