குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் சபரிமலை பயணம் ரத்து!
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தான் இருப்பதாக சந்தேகித்த இந்தியா, பாகிஸ்தான் உடனான உறவை இந்தியா முற்றிலுமாக துண்டித்தது. குறிப்பாக, வான்பரப்பு மூடல், சிந்துநதி ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது.
இதையும் படியுங்கள் : “வீரர்களுக்கு பக்கபலமாய் நிற்போம், தீவிரவாதத்தை வேரறுப்போம்” – நடிகர் சங்கம் அறிக்கை!
இதற்கிடையே, கடந்த 7ம்தேதி நள்ளிரவு 1.44 மணியளவில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. மொத்தம் 9 இடங்களில் (சகாம்ரு, முரித்கி, கோட்லி, சியால்கோட், குல்பூர், பிம்பர், பஹவல்பூர்) பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இந்தியா – பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் எல்லையில் போர் பதற்றம் நிலவி வருகிறது.
இந்த நிலையில் இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் சபரிமலை பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மே 19ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய திட்டமிட்ருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.