39 தொகுதிகளுக்கு தேமுதிக பொறுப்பாளர்கள் நியமனம் - பட்டியலை வெளியிட்டார் பிரேமலதா விஜயகாந்த்!
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மக்களவைத் தேர்தலில் 39 தொகுதி பொறுப்பாளர்களை நியமித்து உத்தரவிட்டுள்ளார்.
நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பணிகளை கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன.
அதிமுக தரப்பில் தேமுதிக-விற்கு 4 தொகுதிகள் வரை ஒதுக்க முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியானது. கிருஷ்ணகிரி, விருதுநகர் தொகுதிகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், கடலூர், திருச்சி தேமுதிகவிற்கு ஒதுக்க அதிமுக தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மக்களவைத் தேர்தலில் 39 தொகுதி பொறுப்பாளர்களை நியமித்து உத்தரவிட்டுள்ளார். அதன்படி 30 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்களுக்கு கட்சியின் உறுப்பினர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.