தேமுதிக பொதுச் செயலாளரானார் பிரேமலதா விஜயகாந்த்!
தேமுதிக கட்சியின் பொதுச்செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை திருவேற்காட்டில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பங்கேற்றார். அவரைக் கண்ட கட்சித் தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர். கட்சியினரை பார்த்து கைகளை உயர்த்தி தனது மகிழ்ச்சியை விஜயகாந்த் வெளிப்படுத்திய போது, பலர் கண்ணீர் விட்டு நெகிழ்ந்தனர்.
இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து முடிவெடுக்க தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு முழு அதிகாரம் வழங்குவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதனைத் தொடர்ந்து தேமுதிக பொதுச்செயலாளராக பிரேமலதா விஜயகாந்தை ஒருமனதாக தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையும் படியுங்கள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் மத்திய குழுவினர் சந்திப்பு - புயல் பாதிப்புகள் குறித்து ஆலோசனை..!
தேமுதிக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பிரேமலதா விஜயகாந்த், அக்கட்சித் தலைவரும் தனது கணவருமான விஜயகாந்தின் காலில் விழுந்து ஆசி பெற்றார். பின்னர் கட்சியின் பொதுச்செயலாளராக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு கட்சித் தொண்டர்கள் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
தற்போதைய சூழலில் தமிழக அரசியல் கட்சிகளின் தலைமை பொறுப்பில் இருக்கும் ஒரே பெண் தலைவர் பிரேமலதா விஜயகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.