முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு: மாநில வாரியாக பதிவாகியுள்ள வாக்குகள் நிலவரம்!
நாடாளுமன்ற தேர்தலில் முதல் கட்டமாக இன்று 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்கள் என மொத்தம் 102 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தல் நிறைவு பெற்றது.
இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான மக்களவைத் தேர்தல் தொடங்கிவிட்டது. நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ம் தேதி (இன்று) தொடங்குகிறது. இறுதி மற்றும் 7ம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ம் தேதி நடைபெறும் எனவும், ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதன்படி, தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 மக்களவை தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. அனைத்து பகுதிகளிலும் காலை முதலே பொதுமக்கள் வரிசையில் நின்று தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றினர்.
மாலை 5 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் 77.57% வாக்குகள் பதிவாகியுள்ளன. திரிபுராவில் 76.1%, புதுச்சேரியில் 72.84% வாக்குகள் பதிவாகியுள்ளன. தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 63.20% வாக்குகள் பதிவாகின. உத்தர பிரதேசம் 57.54%, உத்தரகாண்ட் 53.56%, ராஜஸ்தான் 50.27%, மத்திய பிரதேசம் 63.25%, மகாராஷ்டிரம் 54.85%, பிகார் 46.32%, சத்தீஸ்கர் 63.41%, ஜம்மு காஷ்மீர் 65.08%, அருணாசல் பிரதேசம் 63.44%, அந்தமான் நிகோபார் 56.87%, அஸ்ஸாம் 70.77%, லட்சத்தீவு 59.02%, மணிப்பூர் 67.66%, மேகாலயா 69.91%, மிஸோரம் 52.73%, நாகாலாந்து 55.79%, சிக்கிம் 68.06%, திரிபுரா 76.10% வாக்குகள் பதிவாகியுள்ளன.