கனமழை பெய்யக்கூடிய 27 மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்; ஆட்சியர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு உத்தரவிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்....
கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள 27 மாவட்டங்களில், தகுந்த முன்னெச்சரிக்கை மேற்கொள்ள ஆட்சியர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்த, ஆட்சியர்கள், மீன்வளத்துறை ஆணையருக்கு ஆணையிட்டுள்ளார்.
கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள கடலூர், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களுக்கு முன்னெச்சரிக்கை, நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அமைச்சர்களுக்கு முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் உள்பட 13 மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரணப் பணிகளை கண்காணிக்க ஐஏஎஸ் அதிகாரிகளை நியமனம் செய்துள்ளார்.
மாநில, மாவட்ட அவசரக் கால செயல்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் முறையே 1070 மற்றும் 1077 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களில், கூடுதல் அலுவலர்களுடன் செயல்படவும் ஏற்பாடு செய்துள்ளதாக கூறியுள்ளார். பொதுமக்கள் Whatsapp எண் 94458 69848 மூலம் புகார்களைப் பதிவு செய்யலாம் என்றும், அந்த அறிக்கையில் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.