வங்காளதேசத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - உயிரிழப்பு எண்ணிக்கை 10 ஆக அதிகரிப்பு!
வங்காளதேச தலைநகர் டாக்கா அருகே நேற்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவாகியுள்ளது. நர்சிங்டி பகுதியில் இருந்து தெற்கு-தென்மேற்கில் 13 கிலோமீட்டர் தூரத்தில் நேற்று காலை 10.08 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இது புவியின் மேற்பரப்பில் இருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது. இதனால் அங்குள்ள பொதுமக்கள் வீடுகள், அலுவலகங்களை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர்.
இதனிடையே நிலநடுக்கத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்த நிலையில், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில், நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 100-க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.