“கனமழை நின்றவுடன் மின் விநியோகம் தொடங்கும்!” -அமைச்சர் தங்கம் தென்னரசு
“கனமழை நின்றவுடன் மின் விநியோகம் தொடங்கும்” என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜம் புயல் வேகமாக கரையை நெருங்கி வரும் நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 12 மணி நேரத்திற்கும் மேலாக பெய்து வரும் தொடர்மழையால் சென்னை வெள்ளக்காடாக மாறியிருக்கிறது. புறநகர் மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகியவையும் மிதக்கத் தொடங்கியுள்ளன.
பேருந்து போக்குவரத்து முதல் விமானப் போக்குவரத்து வரை அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு சாலைகள் போக்குவரத்து செல்ல முடியாமல் துண்டிக்கப்பட்டுள்ளன. பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
இந்த நிலையில், பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் துணை மின்நிலையத்தில் ஆய்வு செய்த பின் பேட்டியளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, கனமழை நின்றவுடன் மின் விநியோகம் தொடங்கும் என்றும், பாதுகாப்பு காரணங்களுக்காக மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
"துணை மின் நிலையங்களில் தேங்கியுள்ள தண்ணீரால், மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. மின் நிலையங்களில் தேங்கிய மழை நீரை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஒரு சில இடங்களில் மரங்கள் விழுந்துள்ளதால், மின்சாரத்தை கவனத்துடன் கையாள வேண்டியுள்ளது. மழை பொழிவு குறைந்ததும் உடனடியாக மின் விநியோகம் சீராக வழங்கப்படும். அதுவரை பொதுமக்கள் பொறுமை காக்க வேண்டும்.
மின் விநியோகத்தை சீரமைக்க களப்பணியில் கூடுதல் களப்பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். மருத்துவமனைகளுக்கு தங்கு தடையின்றி மின் வழங்கப்பட்டு வருகிறது. எந்த ஒரு உயிரிழப்பும் ஏற்படக் கூடாது என்பதில் அரசு கவனமுடன் செயல்பட்டு வருகிறது" என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.