தமிழ்நாடு முழுவதும் அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைப்பு - புதிய கால அட்டவணையை வெளியிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
தமிழ்நாடு முழுவதும் நாளை (டிச.11) தொடங்க இருந்த அரையாண்டுத் தேர்வுகளை டிசம்பர் 13-ம் தேதிக்கு ஒத்திவைக்கும்படி பள்ளிக்கல்வித் துறைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மிக்ஜாம் புயல் காரணமாக தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் முகாம்களில் மக்கள் தங்கவைக்கப்பட்டனர்.
தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் மழைநீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. அரசு அதிகாரிகள், மாநகராட்சி ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள் என பலரும் இந்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், பல இடங்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் மிக்ஜாம் புயலால் பெரும் பாதிப்புக்கு உள்ளான சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் நடைபெற இருந்த அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளில் நாளை தொடங்க இருந்த அரையாண்டுத் தேர்வுகளை ஒத்திவைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள் : ஒரு வாரத்தில் டோக்கன் மூலம் ரூ.6000 நிவாரண நிதி வழங்கப்படும்..! - அமைச்சர் உதயநிதி
இதுதொடர்பாக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது : “ஏற்கெனவே, டிசம்பர் 11-ம் தேதி அரையாண்டுத் தேர்வுகள் தொடங்க இருக்கும் நிலையில், புத்தகங்கள் இல்லாமல் மாணவர்கள் தேர்வுக்கு படித்து தயாராக முடியாது என்ற நிலையினை கருத்தில் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் நாளை (11.12.2023) தொடங்கவிருக்கும் தேர்வுகளை புதன்கிழமை (13.12.2023) தொடங்க வேண்டுமென பள்ளிக்கல்வித் துறைக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. அரையாண்டுத் தேர்வுகளுக்கான புதிய கால அட்டவணையை வெளியிட பள்ளிக்கல்வித் துறைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.”