பிரபல மேட்ரிமோனி ஆப்கள் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கம்!
சேவைக் கட்டண பிரச்னையில் பாரத் மேட்ரிமோனி உள்ளிட்ட 10 நிறுவனங்களின் செயலிகளை கூகுள், தனது பிளே ஸ்டோரில் இருந்து நீக்கியது.
கூகுள் பிளே ஸ்டோரில் செல்போன் செயலி பயன்பாடு தொடர்பாக நிறுவனங்களுக்கு 15% முதல் 30% வரை கட்டணம் வசூலிக்கும் முந்தைய முறையை நீக்க கூகுளுக்கு உத்தரவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, பயன்பாட்டு சேவை கட்டணத்தை 11% முதல் 26% விதிக்கும் முறையை கூகுள் கொண்டு வந்தது. இதன் காரணமாக, ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கும், கூகுளுக்கும் இடையே பிரச்னை வெடித்தது.
கட்டணம் வசூலிப்பது அல்லது சேவையை விலக்கிக்கொள்வது என்ற முடிவை செயல்படுத்த கூகுள் தீவிரம் காட்டியது. இதனை எதிர்த்து கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரியில் அடுத்தடுத்து கூகுள் இரண்டு வழக்குகளை எதிர்கொண்டது. ஆனால், இந்த விவகாரத்தில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ஆதரவான தீர்ப்புகள் நீதிமன்றத்தில் கிடைக்கப் பெறவில்லை.
இதுதொடர்பாக கூகுள் வெளியிட்டுள்ள தகவலில், “கூகுள் பிளே தளத்தைப் பயன்படுத்தும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய இணையதள செயல்பாட்டாளர்களில் 3% பேர் மட்டுமே சேவை கட்டணம் செலுத்தும் நிலையில் உள்ளனர். கூகுள் ஆப் ஸ்டோர், ஆன்ட்ராய்டு மொபைல் இயங்குதளம் ஆகியவற்றில் செய்யப்படும் கட்டண ஆதரவு முதலீடானது, இலவச விநியோகம், இணையதள கருவிகள், பகுப்பாய்வு சேவைகளை தொடர்ந்து உறுதி செய்யும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.