போப் பிரான்சிஸ் மறைவு - அடுத்தது என்ன?... இறுதி சடங்கு எப்படி பின்பற்றப்படுகிறது?
முதலில் போப் மரணத்தை வாடிகன் நகரின் வருவாய் நிர்வாகி தான் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்வார். அவர் போப் அருகே சென்று அவரை பெயரைச் சொல்லி மூன்று முறை அழைக்க வேண்டும். அதற்கு அவர் பதிலளிக்கவில்லை என்றால், போப் மரணமடைந்ததாக உறுதிசெய்யப்படும். இப்போது மருத்துவ நடைமுறைகள் வந்துவிட்ட போதிலும், இன்னும் இந்தப் பழக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது. முன்பு போப் நெற்றியில் சிறிய வெள்ளி சுத்தியலைத் தட்டும் நடைமுறையும் இருந்தது. ஆனால், 1963 உடன் இந்த நடைமுறை நிறுத்தப்பட்டது.
இதையடுத்து வாடிகனில் போப் வாழ்ந்த இல்லம் பூட்டப்படும். பின்னர், போப் அணிந்திருக்கும் மீனவ மோதிரம் மற்றும் முத்திரை உடைத்து அழிக்கப்படும். அதன் பொருள், அத்தகைய அழிவுக்கு பிறகு தான் ஒரு போப்பின் பதவிகாலம் முடிவடைந்தது என கூறப்படும். தொடர்ந்து பொதுமக்களுக்கு போப் மரணம் குறித்து அறிவிக்கப்படும். இதையடுத்து உலகெங்கும் உள்ள தேவாலயங்கள் துக்கத்தில் மணிகளை ஒலிப்பார்கள்.
போப் அணிந்திருக்கும் மீனவ மோதிரம் குறித்து ஒரு வரலாறு உண்டு. இயேசுவின் முதல் சீடர்கள் அனைவரும் மீனவர்கள். இயேசு ஒரு சிறந்த மீனவராகவும் இருந்தார். முதல் போப் பேதுரு, இந்த மீன்பிடித் திறமையை இயேசுவிடமிருந்து கற்றுக்கொண்டார். ஒவ்வொரு போப்பும் தனித்தனி மீனவர் மோதிரத்தை அணிவது வழக்கம். போப்பை சந்திக்கும் போது மக்கள் இந்த மோதிரத்தை முத்தமிடுகிறார்கள். அது இயேசுவை முத்தமிடுவது போன்றதாக கருதப்படுகிறது.
போப் இறுதி சடங்கு என்பது அவர் உயிரிழந்து 4-6 நாட்களுக்குள் நடக்க வேண்டும். உலகெங்கும் உள்ள தேவாலயங்களில் 9 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. வரலாற்று ரீதியாக, போப் அடக்கம் செய்யப்படுவதற்கு முன்பு அவர்களின் உடல் எம்பாமிங் முறையில் பதப்படுத்தப்பட்டு, அவர்களின் உறுப்புகள் அகற்றப்படும். இப்படி அகற்றப்பட்ட உறுப்புகளில் 20-க்கும் மேற்பட்ட முன்னாள் போப்களின் இதயங்களை மட்டும் ரோமின் ட்ரெவி நீரூற்றுக்கு அருகிலுள்ள ஒரு தேவாலயம் நினைவுச்சின்னங்களாக வைத்திருக்கிறது.
பொதுவாக, போப்பாக உள்ளவர்கள் செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் அடக்கம் செய்யப்படுவார். ஆனால், போப் பிரான்சிஸ், விருப்பப்படி, அவர் அடிக்கடி தனிப்பட்ட பிரார்த்தனை மற்றும் தியானத்திற்காக சென்ற செயிண்ட் மேரி மேஜர் பசிலிக்காவில் அடக்கம் செய்யப்படுகிறார்.