போப் பிரான்சிஸ் இறுதி சடங்கு - நாடு முழுவதும் தேசியக் கொடியை அரை கம்பத்தில் பறக்க விட மத்திய அரசு முடிவு!
நிமோனியா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காலமானார். இது உலக முழுவதும் உள்ள கத்தோலிக்க திருச்சபையாரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து உலக தலைவர்கள் அவருக்கு சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்தனர்.
அவரது இறுதிச் சடங்கு நாளை மறுதினம்(ஏப்ரல்.26) ஆம் தேதி நடைபெறவுள்ளது. வாடிகன் செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நடைபெறவுள்ள இந்த இறுதி சடங்கில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், ஸ்பெயினின் மன்னர் பெலிப்பெ உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கலந்துகொண்டு துக்கம் அனுசரிக்க உள்ளனர்.
அந்த வகையில் தமிழ்நாட்டில் இருந்து போப் பிரான்சிஸின் இறுதி சடங்கில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் சா.மு. நாசர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் இனிகோ எஸ். இருதயராஜ் ஆகியோர் கலந்து கொள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு நடைபெறும் நாளன்று இந்திய அரசு துக்கம் அனுசரிக்கும் என்றும் இந்தியா முழுவதும் தேசியக் கொடி பறக்கும் அனைத்து கட்டடங்களிலும் அரைக்கம்பத்தில் தேசியக் கொடி பறக்கவிடப்படும் என்றும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.