பூனம் பாண்டேவுக்கு வலுக்கும் எதிர்ப்பு - வழக்கு பதிவு செய்ய போலீசாருக்கு கோரிக்கை.!
தான் இறந்துவிட்டதாக நாடகம் ஆடிய பூனம் பாண்டேவுக்கு எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில் வழக்கு பதிவு செய்ய போலீசாருக்கு கோரிக்கை வந்தவண்ணம் உள்ளன.
2013-ம் ஆண்டு வெளியான ‘நாஷா’ படத்தின் மூலம் பாலிவுட் திரைத்துறையில் அறிமுகமானவர் பூனம் பாண்டே (32). மாடலாகவும் நடிகையாகவும் பாலிவுட் திரையுலகில் வலம் வந்த பூனம் பாண்டே, திரைப்படங்களைத் தாண்டி கங்கனா ரனாவத் நடத்திய ரியாலிட்டி ஷோவான 'லாக் அப்' மூலம் பிரபலமானார்.
இதனிடையே நடிகை பூனம் பாண்டே கர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக அவரது சமூக வலைதள மேலாளர் (பிப். 03) பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த பதிவில், “எங்கள் அன்புக்குரிய பூனம் பாண்டேவை கர்ப்பப்பை புற்றுநோயால் இழந்துவிட்டோம் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்." என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இப்பதிவு பூனம் பாண்டேவின் ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. எனினும், இப்பதிவின் உண்மை நிலை குறித்தும் ரசிகர்கள் சந்தேகம் எழுப்பினர். ஆனால் அவரின் இறப்பை வட இந்திய ஊடகங்கள் உறுதிப்படுத்தி செய்திகள் வெளியிடப்பட்டன. ஊடகத்திடம் பேசிய பூனம் பாண்டே மேலாளர், ”புற்றுநோய் இருந்தது உண்மைதான். உ.பி.யில் பூனம் பாண்டேவின் சொந்த ஊரில் இறுதிசடங்குகள் நடக்கும்” என்று தெரிவித்தார்.
“நான் கருப்பை வாய் புற்றுநோயால் இறந்துவிட்டேன் என்று சொன்னது மிகப்பெரிய தவறுதான். ஆனால், அதன் நோக்கம் என்ன? இந்த செய்தியை கேட்டதும் பலரும் கருப்பை வாய் புற்றுநோய் பற்றி பேசினோம் இல்லையா? இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே என் நோக்கம். மற்ற புற்றுநோய் போல இது உங்களின் உயிரை அவ்வளவு சீக்கிரம் எடுத்துவிடாது. இதனை சரியான மருத்துவத்தின் மூலம் குணப்படுத்தலாம். அதனால், இதுபற்றி நீங்கள் நிச்சயம் தெரிந்கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார் பூனம்.
இவர் பேச வந்த விஷயம் நல்லதுதான் என்றாலும், அதை இப்படியா சொல்ல வேண்டும் என்றும், இதுபோன்ற பப்ளிசிட்டி ஆபத்து என்றும் ரசிகர்கள் அவரைத் திட்டி வருகின்றனர். அவர் இறந்துவிட்டார் என்று நேற்று செய்தி வெளியானாலும் அவர் இறக்கவில்லை என்ற சந்தேகத்தையும் ரசிகர்கள் கிளப்பினர். ஏனெனில், அவரது தங்கை ஷ்ரதா பாண்டே, குடும்ப உறுப்பினர்கள், மேனேஜர் என யாரையுமே மேலதிக தகவல்களுக்காக தொடர்பு கொள்ள முடியவில்லை.
இந்த நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினரான சத்யஜித் தம்பே பூனம் பாண்டேவின் இந்த நாடகம் பொதுமக்களிடையே தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும். எனவே அவர் மீது மும்பை போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சத்யஜித் தம்பே புகார் அளித்துள்ளார்.
இதே போல மும்பையில் செயல்பட்டு வரும் அகில இந்தியா சினிமா தொழிலாளர் சங்கமும் பூனம் பாண்டேவின் இந்த விளம்பரம் தேடும் முயற்சிக்கு கடும் கண்டனங்களை தெரிவித்ததோடு போலீசார் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.