'பொன்முடியின் சொத்துகளை முடக்க வேண்டிய அவசியம் இல்லை' - உயர்நீதிமன்றம்!
சொத்துக் குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவரது சொத்துக்களை முடக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்துள்ளார்.
கடந்த 2006- 2011-ம் ஆண்டு வரை திமுக ஆட்சியில், உயர்கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்த போது, வருமானத்துக்கு அதிகமாக 1 கோடியே 75 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக, அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு எதிராக 2011-ம் ஆண்டு விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோரை விடுதலை செய்து கடந்த 2016-ம் ஆண்டு தீர்ப்பளித்தது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் விதமாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து வழக்காக விசாரணைக்கு எடுத்து, இது தொடர்பாக பொன்முடி மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார்.
இதையும் படியுங்கள் : ஆஸ்கர் ரேஸில் இருந்து வெளியேறியது ‘2018’ - இந்திய ரசிகர்கள் ஏமாற்றம்..!
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தற்போது உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு மாற்றப்பட்டுள்ளதால், அவருக்குப் பதிலாக நீதிபதி எம்.ஜெயச்சந்திரன் இந்த வழக்கை விசாரித்தார். இந்த வழக்கில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.72 கோடி அளவுக்கு அதாவது 64.90% அளவுக்கு அமைச்சர் பொன்முடியும், அவரது மனைவி விசாலாட்சியும் சொத்து குவித்துள்ளது நிரூபணம் ஆகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து இருவரும் குற்றவாளிகள் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்தார். மேலும் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், சுமார் ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேல்முறையீடு செய்வதற்காக தண்டனையை நிறுத்தி வைக்க கோரிக்கை வைக்கப்பட்டது.
அதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, 30 நாட்கள் தண்டனையை நிறுத்தி வைப்பதாக தெரிவித்தார். இந்த நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கில் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அமைச்சர் பதவியையும், சட்டப்பேரவை உறுப்பினர் பதவியையும் பொன்முடி இழந்தார்.
இந்நிலையில், பொன்முடியின் சொத்துகள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்த வழக்கில் இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்தார்.