தவெக நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு!
தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்து வருகிறார். அதன்படி கடந்த 13-ம் தேதி திருச்சி, அரியலூரில் பிரசாரம் மேற்கொண்ட நிலையில் நேற்று நாகை மற்றும் திருவாரூரில் பிரசாரம் செய்தார்.
நாகை அண்ணா சிலை அருகே பிரச்சாரம் மேற்கொண்ட தவெக தலைவர் விஜய் பொது மக்களிடையே உரையாற்றினார். விஜயின் பிரசாரத்தை பார்க்க ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டு இருந்தனர். அப்போது காவல்துறை விதித்த நிபந்தனைகளை மீறி தமிழக வெற்றி கழகத்தினர் கட்டிடங்கள், மேற்கூரைகளில் ஏறி நின்று கொண்டிருந்தனர்.
அப்போது விஜய் பேசிய இடத்திற்கு அருகாமையில் உள்ள வேளாங்கண்ணி பேராலயத்திற்கு சொந்தமான மாதா திருமண மண்டபத்தின் சுற்றுச்சுவர் மீது தவெக தொண்டர்கள் அதிகளவு ஏறியதால் கீழே விழுந்தது. மேலும் சுவற்றின் முன்னால் அமைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்புகளும் சாய்ந்துள்ளது. இதனால் நிபந்தனைகளை மீறி தனியார் சொத்துக்கு சேதம் விளைவித்ததாக தமிழக வெற்றிக் கழக நாகை மாவட்ட நிர்வாகிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.