பாகிஸ்தானுக்கு எதிரான போராட்டத்தில் சவுதி கொடியை காலால் மிதித்த கும்பல் - போலீசார் விசாரணை!
உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில், கலிமா வாசகம் பொருந்திய சவுதி அரேபிய தேசியக் கொடியை காலில் போட்டு சிலர் மிதிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. காஷ்மீரில் சமீபத்தில் நடந்த பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போராட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் சவுதி அரேபியாவின் தேசியக் கொடியை கீழே போட்டு மிதித்து, அதன்மீது நடந்து செல்கின்றனர். இது இணையத்தில் பெரும் சீற்றத்தை தூண்டிய நிலையில், சவுதியில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருவதாக பிரயாக்ராஜ் போலீசார் தெரிவித்துள்ளனர்.
“இது இஸ்லாத்தை அவமதிப்பது மட்டுமல்ல, முஸ்லிம்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் நோக்கில் வேண்டுமென்றே செய்யப்பட்ட செயல்” என்று பிரயாக்ராஜைச் சேர்ந்த மூத்த மதகுரு மௌலானா ரஷீத் காஸ்மி கூறினார்.
"இந்த செயலில் ஈடுபட்டவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். நாங்கள் அமைதியை விரும்புகிறோம், ஆனால் இதுபோன்ற நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்படாமல் விடப்பட்டால், அது கடுமையான விளைவுகளுக்கு வழிவகுக்கும்.” எனவும் தெரிவித்தார்.