விஷச்சாராய வழக்கு: மாதேஷிடம் நடத்திய விசாரணையில் அடுத்தடுத்து வரும் அதிர்ச்சித் தகவல்கள்!
கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கு தொடர்பாக குற்றவாளி சின்னதுரையை தொடர்ந்து, மாதேஷிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்ட கருணாபுரம் மற்றும் பிற பகுதிகளைச் சேர்ந்த 132 பேர் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 21 பேர் ஜூன் 19 அன்று உயிரிழந்தனர். இதேபோல ஜூன் 20 அன்று மேலும் 19 பேர் இறந்தனர்.
அப்போது, தின்னர் என்ற போலி பில் மூலமாக 1000 லிட்டர் மெத்தனாலை வாங்கி விற்பனை செய்துள்ளதாகவும், ஆன்லைன் மூலமாக தொழிற்சாலைகளை கண்டறிந்து ஜிஎஸ்டி பில் இல்லாமல் வாங்கி இருப்பதும் தெரிய வந்தது. சென்னை புறநகர் பகுதியான மாதவரம் ரவுண்டானா அருகில் உள்ள தொழிற்சாலையில் ஒன்றில் இருந்தும் மெத்தனாலை போலி பில் மூலமாக வாங்கியுள்ளனர். மெத்தனாலில் வெறும் தண்ணீரை மட்டும் கலந்து சாராயமாக விற்பனை செய்துள்ளனர்.
சின்னத்துரையிடம் இருந்து கைப்பற்றப்பட்ட சாராயப் பாக்கெட்டுகளை தடவியல் துறைக்கு அனுப்பியுள்ளனர். மெத்தனாலை டாடா ஏஸ் மூலமாக மொத்தமாக கொண்டு வந்து அதனை கார் ஒன்றின் மூலமாக மற்ற இடங்களிலும் விற்பனை செய்துள்ளனர். மாதேஷின் செல்போனில் பணம் அனுப்பியது தொடர்பான ஆன்லைன் பரிவர்த்தனை, பணம் பெறுவது போன்ற புகைப்படங்களை கைப்பற்றி விசாரணையை சிபிசிஐடி போலீசார் துவக்கியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மெத்தனால் விற்பனையாளர்கள் சின்னதுரை அவரது கூட்டாளிகள் சாகுல் ஹமீது, ஜோசப் ராஜ் ஆகிய மூவரும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா, தாமோதரன் ஆகிய மூவர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், மேலும் மூவரை சிபிசிஐடி போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். மாதேஷிடம் 2வது நாளாக தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.