பீகார் மீது "#PMModi சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார்" - மத்திய அமைச்சர் ஜித்தன் ராம் மாஞ்சி
பிரதமர் மோடி பீகார் மீது சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார் என மத்திய அமைச்சர் ஜித்தன் ராம் மாஞ்சி தெரிவித்தார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள முக்கிய கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் நிதீஷ் குமார், பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் கோரியிருந்தார். இதற்கு, மத்திய நிதித் துறை இணையமைச்சர் பங்கஜ் செளத்ரி கடந்த ஜூலை 22ம் தேதி எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க முடியாது என தெரிவித்தார்.
இந்த சூழலில், மத்திய அமைச்சர் ஜித்தன் ராம் மாஞ்சி பீகார் மாநிலம் பாட்னாவில் தனது 80வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது, “சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்புவது பெரிய விஷயம் அல்ல. ஆனால், கடைசி நிதிநிலை அறிக்கையில் மாநிலத்துக்கு எவ்வளவு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன என்பதை பார்க்க வேண்டும். ரூ.300 கோடிக்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பீகார் மீது பிரதமர் மோடி சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார். எந்த மாநிலத்துக்கும் சிறப்பு அந்தஸ்து வழங்க மாட்டோம் என்று நிதி ஆயோக் ஏற்கெனவே முடிவெடுத்துள்ளது. பீகாரின் வளர்ச்சி எந்த சூழலிலும் நின்றுவிடப் போவதில்லை.”
இவ்வாறு மத்திய அமைச்சர் ஜித்தன் ராம் மாஞ்சி தெரிவித்தார்.