திமுக கூட்டணியில் பாமக? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்!
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் கூட்டணி கணக்குகளை தீவிரப்படுத்தி உள்ளன. பாஜக - அதிமுக மீண்டும் கூட்டணியை உறுதி செய்துள்ளன. முன்பு பாஜக கூட்டணியில் இருந்த பாமக மற்றும் அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக உள்ளிட்ட கட்சிகளின் நிலைப்பாடு குறித்து இன்னும் தெரியவரவில்லை. இதற்கிடையே பாமகவில் ராமதாஸ் - அன்புமணி இடையே மோதல் வெடித்தது.
இந்த சூழலில், திமுக கூட்டணியில் பாமக இணைய வாய்ப்புள்ளதாக பேசப்பட்டது. இந்த நிலையில், திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது,
"திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறும் என்றும் பாமக இணையும் என்றும் கூறுவது வதந்திகளே. திமுக கூட்டணி உறுதியாக உள்ளது. கூட்டணிக் கட்சிகளின் ஆக்கப்பூர்வமான விமர்சனங்களுக்கு மதிப்பளிக்கிறேன். இந்த அரசு, கூட்டணி கட்சிகளின் ஆலோசனைகள் மற்றும் ஆக்கபூர்வமான விமர்சனங்களை கருத்தில் கொண்டு, அவர்களது ஒத்துழைப்புடன் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
அதிமுக பாஜக இடையே கள்ளக் கூட்டணி என ஏற்கெனவே கூறினேன். தற்போது அது உண்மையாகியுள்ளது. அதிமுக - பாஜக கூட்டணியை ஏற்கனவே 2 முறை தோற்கடித்துள்ளோம். 2026 தேர்தலிலும் நிச்சயம் தோற்கடிப்போம். பாஜக உடன் கூட்டணி அமைத்ததன் மூலம், தமிழ்நாட்டு மக்களுக்கு அதிமுக துரோகம் இழைத்துவிட்டது. இந்த கூட்டணியை தமிழ்நாட்டு மக்கள் மூன்றாவது முறையாக தோற்கடிப்பார்கள்.தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக பேசுவதற்கு பிரதமர் இதுவரை நேரம் ஒதுக்கவில்லை"
இவ்வாறு முலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.