இந்தியா கூட்டணி சார்பில் நிதிஷ்குமாருக்கு பிரதமர் பதவி வழங்குவதாக சொல்லப்பட்டதா? - காங்கிரஸ் விளக்கம்
பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு இந்தியா கூட்டணியின் சார்பில் பிரதமர் பதவி வழங்க முன்வந்ததாக ஐக்கிய ஜனதா தள தலைவர்கள் தெரிவித்த நிலையில் இதற்கு காங்கிரஸ் கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது.
மக்களவை தேர்தல் முடிவுக்கு பின்னர், காங்கிரஸ் காரிய கமிட்டி ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. 2 மக்களவை தேர்தல்களை அடுத்து காங்கிரஸ் கட்சி 99 தொகுதிகளை வென்று எதிர்க்கட்சி அந்தஸ்த்து பெற்றுள்ளது. இருந்தாலும் தோல்வி குறித்தும், காங்கிரஸ் கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் இன்று ஆலோசனை நடத்தப்பட்டது.
இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவர் (எதிர்க்கட்சி தலைவர்) யார் என்றும் விவாதிக்கப்பட்டது.
இந்த கூட்டம் முடிந்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கே.சி.வேணுகோபால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவராக ராகுல் காந்தியை காங்கிரஸ் காரிய கமிட்டி தேர்ந்தெடுத்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது என்றார். காங்கிரஸ் கட்சியை நாடாளுமன்றத்தில் வழிநடத்தும் தலைவராக அவர் இருப்பார் என்றும் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர் அவரிடம், பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு இந்தியா கூட்டணி பிரதமர் பதவி வழங்க முன்வந்ததாக ஐக்கிய ஜனதா தளத்தின் செய்தி தொடர்பாளர் கே.சி. தியாகி கூறியுள்ளது குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த கே.சி. வேணுகோபால், இது தொடர்பாக எனக்கு எந்தத் தகவலும் வரவில்லை என தெரிவித்தார்.