கோவாவில் உலகின் மிக உயரமான ராமர் சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
தெற்கு கோவாவின் பர்தகாலியில் உள்ள ஸ்ரீ சமஸ்தானம் கோகர்ண ஜீவோட்டம் மடம் உள்ளது. இது இந்தியாவின் மிக பழமையான துறவியர் மட நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த மடத்தின் 550-வது ஆண்டு விழாவையொட்டி நவம்பர் 27 முதல் டிசம்பர் 7 வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
அந்த வகையில் இன்றைய விழாவில் கலந்து கொண்ட இந்திய பிரதமர் மோடி மடத்தில் அமைக்கப்பட்டுள்ள ராமரின் 77 அடி உயர வெண்கல சிலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். மேலும் இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்ட ராமாயண தீம் பார்க்கையும் மோடி திறந்து வைத்தார்.
குஜராத்தில் அமைந்துள்ள சர்தார் வல்லபாய் பட்டேலின் ஒற்றுமைக்கான சிலையை வடிவமைத்த சிற்பி ராம் சுதர்தான், இந்த சிலையை உருவாக்கியுள்ளார். இது உலகிலேயே மிக உயரமான ராமரின் சிலையாகும். இந்த விழாவில் கோவா முதல்-மந்திரி பிரமோத் சாவந்த், கவர்னர் அசோக் கஜபதி ராஜு ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, “சமூகம் ஒன்றுபடும்போது, ஒவ்வொரு துறையும் ஒன்றாக நிற்கும்போது, நாடு ஒரு பெரிய பாய்ச்சலை ஏற்படுத்துகிறது. இன்று, இந்தியா ஒரு கலாச்சார மறுமலர்ச்சியை அனுபவித்து வருகிறது.
அயோத்தியில் ராமர் கோயிலின் மறுசீரமைப்பு, காசி விஸ்வநாதர் கோயில் புதுப்பிக்கப்பட்டது மற்றும் உஜ்ஜயினியில் உள்ள மகாகாலேஷ்வர் ஜோதிர்லிங்க கோயில் விரிவாக்கம் ஆகியவை நாட்டின் ஆன்மீக பாரம்பரியத்தின் தீவிர மறுமலர்ச்சியை எடுத்துக்காட்டுகின்றன.
"கோவா மற்றும் அதன் கலாச்சாரமானது ஒவ்வொரு மாற்றத்திலும் அதன் அசல் வடிவத்தைப் பாதுகாத்து வருகிறது. இந்த மட நிறுவனமானது ஐந்து நூற்றாண்டுகளுக்கும் மேலான எழுச்சிகளில் இருந்து தப்பிப்பிழைத்து, இன்னும் தொடர்ச்சியின் அடையாளமாக நிற்கிறது” என்றார்.