"இறுதியாக டிரம்புக்கு பிரதமர் மோடி பதிலடியை கொடுத்துவிட்டார்" - பெட்ரோல் டீசல் கலால் வரி உயர்வு குறித்து ராகுல் காந்தி கிண்டல்!
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்கின்றன. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலை தினம்தோறும் நிர்ணயிக்கப்படும். இந்த நடைமுறையைத்தான் எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வரும் நிலையில், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு பல மாதங்களாக மக்களிடையே நிலவி வருகிறது. ஆனாலும் கூடபெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை.
2024ம் ஆண்டில் மக்களவை தேர்தல் நடைபெற்ற நிலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மீண்டும் ஆட்சியமைத்தது. இதனைத் தொடர்ந்து தாக்கல் செய்யப்பட்ட முதல் பட்ஜெட் கூட்டத்தொடரில் பெட்ரோல் டீசல் மற்றும் ஜிஎஸ்டி வரி குறைப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் விலை குறைப்பு குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை.
இந்த நிலையில் நேற்று பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மேலும் ரூ.2 உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கடும் சரிந்துள்ள நிலையில் கலால் வரியை மத்திய அரசு உயர்த்தியுள்ளதால் எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தன.
இதற்கு பதிலளித்த மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கலால் வரி உயர்த்தப்பட்டாலும், பெட்ரோல், டீசல் விலையில் உயர்வு இருக்காது இதனால் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என விளக்கம் அளித்தார். இந்த நிலையில் கலால் வரி உயர்வு குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி..
“'இறுதியாக பிரதமர் மோடி இந்தியா மீது டிரம்ப் விதித்த வரி விதிப்பிற்கு தகுந்த பதிலடியை கொடுத்துவிட்டார். பெட்ரோல்-டீசல் மீதான கலால் வரி மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்தப்பட்டுவிட்டது. அனைத்து இந்தியர்களும் மீள்தன்மை கொண்ட, உற்பத்தி சார்ந்த பொருளாதாரத்தை உருவாக்குவதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை.” என ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.