"விரைவில் சந்திப்போம்.. வெற்றி நிச்சயம்" - பிளஸ் 2 மாணவர்களுக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து!
தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தோ்வு மாா்ச் 3ம் தேதி தொடங்கி 25ம் தேதியுடந் நிறைவு பெற்றது. இந்த தேர்வினை பள்ளிகளில் இருந்து 3 லட்சத்து 78 ஆயிரத்து 545 மாணவர்களும், 4 லட்சத்து 24 ஆயிரத்து 23 மாணவிகளும், தனித்தேர்வர்களாக 18 ஆயிரத்து 344 பேரும், சிறைவாசிகள் 145 பேரும் என மொத்தம் 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 பேர் எழுதினார்கள். ஏப்ரல் 4ம் தேதி விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது.
தொடர்ந்து, கடந்த 15ஆம் தேதி, அதாவது திட்டமிட்டதற்கு முன்கூட்டியே விடைத்தாள் திருத்தும் பணி நிறைவடைந்தது. இந்த நிலையில் இன்று (மே 8) 2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்த ஆண்டு தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், விடைத்தாள் திருத்தும் பணிகள் முன்பே நிறைவு பெற்றதால் 1 நாள் முன்கூட்டியே முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதில் 7, 53,142 மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். 4,05,472 (96.70 சதவிகிதம்) மாணவிகளும், 3,47,670 (93.16 சதவிகிதம்) மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த நிலையில், பிளஸ் 2 மாணவர்களுக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
"12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவ, மாணவிகளுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். பொதுத்தேர்வு தேர்ச்சி மட்டுமே வாழ்வின் எல்லாவற்றையும் முடிவு செய்திடாது என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். எனவே மனம் தளராமல் கடின உழைப்பை மீண்டும் முதலீடாக்கி, புதிய இலக்கை நோக்கிச் செல்ல அனைவருமே தயார் ஆகுங்கள். வெற்றி காணுங்கள். வாழ்வின் அடுத்த நிலைக்குச் செல்லும் நீங்கள், தேர்ந்தெடுக்கும் துறைகளில் பற்பல சாதனைகள் புரிந்து, தலைசிறந்து விளங்கிட வாழ்த்துகிறேன்.
விரைவில் சந்திப்போம்.. வெற்றி நிச்சயம்!"
இவ்வாறு தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.