“இந்தியாவில் #Sports - ஐ விட படிப்புக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது!” - தமிழ்நாடு டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் பேட்டி!
இந்தியாவில் விளையாட்டைவிட படிப்புக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என தமிழ்நாடு டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் தெரிவித்தார்.
சர்வதேச டேபிள் டென்னிஸ் நட்சத்திரங்கள் பங்கேற்கும் 8 வது அல்டிமேட் டேபிள்
டென்னிஸ் விளையாட்டு தொடர் சென்னையில் நாளை முதல் (22.08.24) தொடங்கி,
செப்டம்பர் 7ஆம் தேதி வரை 17 நாட்கள் நடைபெறுகிறது. இந்த 8 வது அல்டிமேட் டேபிள்
டென்னிஸ் விளையாட்டு தொடரில் எட்டு அணிகள் பங்கேற்கின்றன. இதில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை மணிகா பத்ரா, உலக தரவரிசையில் 13 வது இடத்தில் உள்ள பெர்னாடெட் சோக்ஸ், தமிழ்நாடு வீரர்கள் சரத்கமல் மற்றும் சத்யன் ஞானசேகரன் ஆகியோர் பங்கேற்று விளையாடுகின்றனர்.
எட்டு அணிகளில் 16 சர்வதேச வீரர்கள் உட்பட 46 வீரர்கள் களமிறங்குகின்றனர்.
நடப்பு சாம்பியனான அத்லீட் கோவா சேலஞ்சர்ஸ் அணி அறிமுக அணியான ஜெய்ப்பூர்
பாட்ரியாட்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. அந்த வகையில் சென்னையில் நடைபெற உள்ள தேசிய அளவிலான டேபிள் டென்னிஸ் லீக்(UTT)தொடர் குறித்த செய்தியாளர் சந்திப்பு சென்னை எம் ஆர் சி நகரில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இதையடுத்து, ஒலிம்பிக்கில் விளையாடிய தமிழ்நாடு
டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர் தெரிவித்ததாவது :
"நான் முதல் ஒலிம்பிக் 2004 ஆம் ஆண்டு விளையாடும் போது இந்தியா 36 ஆவது
இடத்தில் இருந்தது. தற்போது படிப்படியாக முன்னேறி முதல் 10 இடங்களில்
இருக்கிறோம். அடுத்த ஒலிம்பிக் தொடரில் இந்தியா நிச்சயம் பதக்கம் வெல்லும்
என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அடுத்த ஒலிம்பிக் தொடரில் நான் விளையாடவில்லை.பாரிஸ் ஒலிம்பிக் உடன் எனது பயணம் நிறைவடைந்தது.
இந்திய அரசும் தமிழ்நாடு அரசும் விளையாட்டுக்கு நல்ல ஆதரவு மற்றும் முக்கியத்துவம்
கொடுக்கிறார்கள். தற்போது தான் இந்தியாவுக்கே விளையாட்டு குறித்து தெரிகிறது. கடந்த 5,6 ஆண்டுகளாக தான் விளையாட்டுக்கு இந்தியாவில் முக்கியத்துவம்
கொடுக்கப்படுகிறது. வாழ்க்கையில் எப்பவும் விளையாட்டு இருக்க வேண்டும். உடல் நலம்,மன நலம் மேம்படும், இளம் தலைமுறையினர் விளையாட்டை தங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக வைத்துக்கொள்ள வேண்டும்.
இதையும் படியுங்கள் : #Sikkimlandslide : நீர்மின் நிலையம் முழுவதும் சேதம்!
மக்கள் தொகை அதிகமாக இருந்தால் பதக்கம் அதிகமாக கிடைத்துவிடாது. விளையாட்டு
பொறுத்தவரை நம்மிடம் என்ன கட்டமைப்பு இருக்கிறது என்பது தான் முக்கியம்.
மேலும் சர்வதேச அளவில் பதக்கம் வெல்லும் வாய்ப்பே இந்தியாவுக்கு தற்போது தான்
கொஞ்சம் கொஞ்சமாக கிடைத்து வருகிறது.ஒலிம்பிக்கில் இரட்டை இலக்கத்தை
எட்டுவது தற்போதைக்கு கடினமாக உள்ளது.
இத்தனை ஆண்டுகளாக இந்தியா விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து முதலீடு
செய்யவில்லை, இத்தனை ஆண்டுகளாக படிப்புகளுக்கு மட்டும் தான் முக்கியத்துவம்
அளிக்கப்படுகிறது. குறிப்பாக பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை மருத்துவம், பொறியியல் போன்ற படிப்புகளை படிக்க வைக்க தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். விளையாட்டில் குழந்தைகள் மாநில,தேசிய,சர்வதேச அளவில் முதலிடத்தை பெற வேண்டும் என்கிற எண்ணம் உருவாகி வருகிறது.அடுத்த 10,15 ஆண்டுகளில் இந்தியாவும் ஒரு வலிமையான விளையாட்டு தேசமாக
உருவாகும்" இவ்வாறு அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.