Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"ஏஐ மூலம் மக்களவை தேர்தலை சீர்குலைக்க திட்டம்" - மைக்ரோசாப்ட் எச்சரிக்கை!

07:33 AM Apr 07, 2024 IST | Web Editor
Advertisement

இந்திய மக்களவை தேர்தலை சீர்குலைக்க செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சீனா சதி செய்ய திட்டமிட்டுள்ளதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் எச்சரித்துள்ளது.

Advertisement

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடக்க உள்ளது. இந்நிலையில், இந்தியா உட்படபல்வேறு நாடுகளின் தேர்தல்களை சீர்குலைக்க சீனா சதி திட்டம் தீட்டி செயல்படுத்தி வருவதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் எச்சரித்துள்ளது.

கடந்த மாதம் பிரதமர்மோடியை மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் டெல்லியில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, பல்வேறு துறைகளில் புதுமைகளை புகுத்துவது உட்பட பல்வேறு வழிகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை (ஏஐ) பயன்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்நிலையில், ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மற்ற நாடுகளின் தேர்தலை சீர்குலைக்க சீனா சதி செய்து வருவதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் எச்சரித்துள்ளது. இதுகுறித்து மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தெரிவித்ததாவது,

“இந்தாண்டு உலகம் முழுவதும் சுமார் 64 நாடுகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நாடுகளில் உலக மக்கள்தொகையில் 49% பேர் உள்ளனர். இந்தாண்டு இந்தியா, அமெரிக்கா, தென் கொரியா ஆகிய நாடுகளில் பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தல்களில் தங்களுக்கு சாதகமாக முடிவுகளை மாற்றுவதற்கு சீனா தற்போது ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகிறது.

அதன்மூலம், சமூகவலைதளங்களில் தவறான, பொய்யான, நடக்காத சம்பவங்களை நடந்துபோல பரப்புவதற்கு ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகிறது. இதற்காக சீன அரசின் ஆதரவுடன் பல்வேறு சைபர்மோசடி குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளன. தற்போதைக்கு ஏஐ தொழில்நுட்பம் மூலம் தேர்தலில் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது. எனினும், ஏஐ தொழில்நுட்பத்தை சீனா தொடர்ந்து சோதனை செய்து வருகிறது. வரும்காலங்களில் ஏஐ தொழில்நுட்பத்தை சீனா மிக தீவிரமாகவும், அதிகமாகவும் பயன்படுத்தும் அபாயம் உள்ளது.

தைவான் அதிபர் தேர்தலின்போது, ‘ஸ்டார்ம் 1376’ என்ற பெயரில் சீன அரசின் ஆதரவு பெற்ற சைபர் மோசடி கும்பல் களமிறக்கப்பட்டது. இந்த கும்பல் தைவான் அதிபர் தேர்தலில் தங்களுக்கு பிடிக்காதவர்களுக்கு எதிராக பல்வேறு பொய் செய்திகளை பரப்பிவிட்டது. ஈரானும் ஏஐ தொழில்நுட்பம் மூலம் மக்களை திசைதிருப்ப முயன்றதாக தகவல் உள்ளது. அந்த நாட்டு தொலைக்காட்சி செய்தியாளர்களின் டீப் ஃபேக் வீடியோக்களை கொண்டு மக்களின் மனநிலையை மாற்ற முயற்சி நடந்துள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பொய்யான தகவல்களை பரப்புவது புதிதல்ல. நடைபெற உள்ள அதிபர் தேர்தல் தொடர்பாக தற்போதைய அதிபர் ஜோ பைடன் பேசுவது போன்ற ஒரு போலி ஆடியோ வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விஷயத்தில், சீனாவின் தொடர்பு குறித்து ஆதாரங்கள் இல்லை என்றாலும், தேர்தலில் ஏஐ தொழில்நுட்பத்தின் தாக்கம் தெரியவந்தது. எதிர்வரும் காலங்களில் தேர்தலை சந்திக்கும் இந்தியா, அமெரிக்கா, தென் கொரியா உள்ளிட்ட நாடுகள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்”

இவ்வாறு மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் நுண்ணறிவு குழுவினர் தெரிவித்துள்ளனர். 

Tags :
aiElection2024Elections With News7TamilElections2024Loksabha Elections 2024microsoftNews7Tamilnews7TamilUpdatesParliament Election 2024Technology
Advertisement
Next Article