26 ரஃபேல் போர் விமானங்கள் வாங்க திட்டம்... ரூ.63,000 கோடியில் பிரான்ஸ் - இந்தியா இடையே ஒப்பந்தம்!
இந்திய கடற்படைக்காக மத்திய அரசு 26 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்காக பிரான்ஸின் தஸ்ஸோ நிறுவனத்துடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த நிலையில் ரூ.63 ஆயிரம் கோடியில் 26 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் இந்தியா, பிரான்ஸ் இடையே நேற்று கையெழுத்தானது.
பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்ட நிலையில் இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்த ஒப்பந்தத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு தொடர்பான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
அதன்படி, 22 ஒற்றை இருக்கை ரக ரஃபேல் கடற்படை விமானங்களும், 4 இரட்டை இருக்கை ரக ரஃபேல் கடற்படை விமானங்களும் பிரான்சிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட உள்ளன. இதில், 10 விமானங்கள் நடுவானில் எரிபொருளை நிரப்பும் வசதியுடன் வடிவமைக்கப்படவுள்ளன. இதனிடையே ஒப்பந்தம் கையெழுத்தான தேதியில் இருந்து அடுத்த 5 ஆண்டுகளுக்குள் இந்தியாவிடம் 26 விமானங்களும் ஒப்படைக்கப்படும்.
ஏற்கனவே இந்திய விமானப்படையிடம் 36 ரஃபேல் ஜெட் விமானங்கள் உள்ளன. அவை அம்பாலா மற்றும் ஹஷிமாராவில் உள்ள தளங்களில் இருந்து இயக்கப்படுகின்றன. இந்நிலையில் தற்போது கொள்முதல் செய்யப்பட உள்ள ரஃபேல் போர் விமானங்கள் கடற்படையிடம் ஒப்படைக்கப்பட உள்ளன.