சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் - பம்பையில் இருந்து சன்னிதானம் செல்ல 14 மணி நேரம்!
சபரிமலையில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுவதால் தரிசனத்துக்கான உடனடி முன்பதிவை நிறுத்த வேண்டும் என்று போலீசார் வலியுறுத்தியுள்ளனர்.
சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் மண்டலகால, மகரவிளக்கு பூஜைகளுக்காக கடந்த
நவம்பர் மாதம் 16-ம் தேதி நடை திறக்கப்பட்டது. தொடக்கத்தில் பக்தர்கள்
எண்ணிக்கை குறைவாக இருந்து வந்தது. கடந்த வாரத்திலிருந்து பக்தர்கள் எண்ணிக்கை
அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் 90,000 பக்தர்கள் வரை சபரிமலையில்
தரிசனத்துக்காக சென்று வருகின்றனர். ஒரு நிமிடத்தில் 75 பேர் 18-ம் படி
ஏறிச்செல்வதாக கணக்கிடப்பட்டுள்ளது.
அதிலும் முந்தைய நாள்களில் தரிசனம் செய்யாதவர்களும் சன்னிதானத்திலேயே தங்கி மறுநாள் தரிசனம் செய்வதால், சன்னிதானத்தில் கூட்டம் அலை மோதுகிறது. நேரம் அதிகரிக்கப்பட்ட பின்னரும் பக்தர்களின் வருகை 2 நாட்களாக அதிகரித்துதான் வருகிறது. ஒரு நாளைக்கு சராசரியாக ஆன்லைன் புக்கிங் மூலம் 90,000 பேரும், நேரடி புக்கிங் மூலம் 30,000 பேரும் தரிசனத்திற்கு வருகின்றனர். இதனால் தினமும் 1 லட்சத்திற்கும்
அதிகமானோர் குவிந்து வருகிறார்கள்.
இந்த முறை குழந்தைகள், பெண்கள், வயதானர்கள் அதிக அளவில் சுவாமி தரிசனம் செய்ய வந்துள்ளதால் கூட்ட நெரிசலில் 18-ம் படி ஏறுவதற்கு அதிக சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் 18-ம் படி ஏறுவதற்காக காத்திருக்கும் மற்ற பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து காணப்படுகிறது. நிலக்கல் பார்க்கிங் ஏற்பாட்டில் குளறுபடி ஏற்பட்டதால் சுமார் 4 மணி நேரம் காத்திருக்கும் நிலை உருவாகியது. பம்பையில் இருந்து சந்நிதானம் செல்ல சுமார் 14 மணி நேரம் ஆகிறது.
இதையும் படியுங்கள்: மருத்துவமனைக்குள் புகுந்த சிறுத்தை – அலறி அடித்து ஓடிய நோயாளிகள்!
நிலக்கல்லில் இருந்து பம்பா-வுக்கு செல்ல பஸ் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. அனைத்து பஸ்களும் கூட்டமாகவே இருந்ததால் பக்தர்கள் செய்வதறியாமல் திணறினர். சன்னிதானத்தில் பக்தர்கள் கூட்டத்தை குறைக்க வேண்டும் என்பதற்காக, பம்பை மற்றும் நிலக்கல்லில் பக்தர்கள் காக்க வைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் தினசரி சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்களின் எண்ணிக்கையை 75,000 ஆக குறைக்க வேண்டும் என போலீசார், தேவசம் போர்டுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
அதேபோல சாமி தரிசனத்துக்கான உடனடி முன்பதிவுக்கு எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை என்பதால் உடனடி முன்பதிவு செய்து லட்சகணக்கில் பக்தர்கள் சபரிமலைக் வருகின்றனர். இதன்காரணமாகவே பக்தர்கள் கூட்ட நெரிசல் கட்டுக்கடங்காத வகையில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் சாமி தரிசனத்துக்கான உடனடி முன்பதிவை நிறுத்த வேண்டும் என்று போலீசார் வலியுறுத்தியுள்ளனர்.