அயோத்தி ராமர் கோயிலின் கருவறை புகைப்படங்கள் வெளியீடு!
அயோத்தி ராமர் கோயிலின் கருவறை புகைப்படத்தை ராம் ஜென்மபூமி அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் பகிர்ந்துள்ளார்.
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த 2019-ஆம் ஆண்டு அளித்த தீர்ப்பையடுத்து அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. குறிப்பாக 2.27 ஏக்கர் பரப்பளவில் மூன்றடுக்கில் உருவாகி வரும் ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அதனை தொடர்ந்து, இக்கோயிலின் கருவறையில் மூலவர் குழந்தை ராமர் சிலை வைக்கப்பட்ட உள்ளது.
ராமர் சிலைக்கு வரும் ஜனவரி 22-ம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ள மூலவர் குழந்தை ராமரின் சிலை 8 அடி உயரம், 3 அடி நீளம், 4 அடி அகலம் கொண்ட தங்க முலாம் பூசப்பட்ட சிம்மாசனத்தில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், மத்திய அமைச்சர்கள், பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர்.
இந்நிலையில் ராம் ஜென்மபூமி அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் கோயில் கருவறையின் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ள சம்பத் ராய், சன்னதி கிட்டத்தட்ட தயாராகிவிட்டது. விளக்குகள் பொருத்தும் பணியும் சமீபத்தில் முடிந்தது. சில புகைப்படங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக வெள்ளிக்கிழமை, ராம ஜென்மபூமி கோவிலின் தற்போதைய நிலையைக் காட்டும் புகைப்படங்களை அறக்கட்டளை பகிர்ந்துள்ளது. அறக்கட்டளையின் மேற்பார்வையில் கோயில் கட்டும் பணி சீரான வேகத்தில் நடைபெற்று வருகிறது.