பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கு - என்ஐஏ அதிகாரிகள் ஆளுநர் மாளிகை வாயிலில் ஆய்வு.!
ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் என்ஐஏ அதிகாரிகள் ஆளுநர் மாளிகை வாயிலில் ஆய்வு மேற்கொண்டனர்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை அருகே அக். 25-ம் தேதி பெட்ரோல் குண்டு வீச முற்பட்டவரை பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் மடக்கி பிடித்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அந்த நபர் பிரபல ரவுடி கருக்கா வினோத் என்பது தெரிய வந்தது. அவரிடமிருந்து மேலும் 2 பெட்ரோல் குண்டுகளை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.
பின்னர் கருக்கா வினோத் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இதனிடையே கருக்கா வினோத்தை 3 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்கக் கோரி காவல் துறை தரப்பில் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் கிண்டி காவல்துறை சார்பில் 3 நாள்கள் காவல் வழங்கக் கோரி மனு அளிக்கப்பட்டது.
இதையடுத்து, கருக்கா வினோத்தை போலீஸாா் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்தனர். அதில், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். 10 ஆண்டுகள் சிறையில் இருக்கும் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்பதற்காக பெட்ரோல் குண்டுகளை வீசினேன் என்று அவர் வாக்குமூலம் அளித்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
இதனைத் தொடரந்து புழல் சிறையில் அடைக்கப்பட்ட கருக்கா வினோத் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் பெட்ரோல் வெடிகுண்டு வீசிய இடத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தடயவியல் அதிகாரிகள் துணையோடு ஆய்வு மேற்கொண்டனர்.