குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு இடைக்கால தடை வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மனு!
குடியுரிமை திருத்தச் சட்ட அமலாக்கத்துக்கு இடைக்காலத் தடை விதிக்க கோரி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ) நிறைவேற்றப்பட்டது. பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் மதரீதியாக துன்புறுத்தப்பட்டு 2014 டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பு இந்தியாவில் அடைக்கலம் புகுந்த இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்த மதத்தினர், ஜெயின் மதத்தினர், பார்சிகள், கிறிஸ்தவர்களுக்கு குடியுரிமை வழங்க இந்த சட்டம் வழிவகுக்கிறது.
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகியவை முஸ்லிம் நாடுகள் என்பதால் சிஏஏ சட்டத்தில் முஸ்லிம்கள் சேர்க்கப்படவில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்தது. இதை ஏற்காமல் 2019 டிசம்பர் முதல் 2020 மார்ச் வரை டெல்லி உட்பட நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்தன. டெல்லியில் பெரும் கலவரம் வெடித்தது. இந்த போராட்டங்களில் 65-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 3,000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதனால் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படவில்லை.
இதற்கிடையே குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிமுறைகள் வெளியிடப்பட்டது. இத்துடன் இந்த சட்டம் அமலுக்கு வந்துவிட்டதாக மத்திய அரசு அறிவித்தது. குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தியதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. இந்த நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
"குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து சுமார் 250 மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் மீதான விசாரணை நிலுவையில் உள்ள நிலையில், இச்சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சட்ட விதிகள் மூலம் குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இந்திய குடியுரிமையைப் பெற முடியும்.
குடியுரிமை திருத்தச் சட்டம் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று உச்சநீதிமன்றம் இறுதியாக தீர்மானித்தால், இந்த சட்டத்தின் மூலம் குடியுரிமை பெற்றவர்கள், இந்திய குடியுரிமையை இழக்க நேரிடும். எனவே, குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் இறுதி முடிவை எடுக்கும் வரை, அதன் விதிகள் மற்றும் சட்ட அமலாக்கத்துக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். புலம்பெயர்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்குவதை ஐயுஎம்எல் எதிர்க்கவில்லை. இந்தச் சட்டம் ஒரு குறிப்பிட்ட மதத்தை ஒதுக்கி வைப்பதைத்தான் எதிர்க்கிறது. "
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.