#Lightning | மின்னல் தாக்கி கால்பந்து வீரர் பலி... மைதானத்தில் நடந்த சோகம்!
கால்பந்து போட்டியின்போது மின்னல் தாக்கியதில் வீரர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பெரு நாட்டின் சில்கா மாவட்டத்தில் உள்ள ஹுவான்கேயோ பகுதியில் நேற்று (நவ.4) பெல்லாவிஸ்டா - சோக்கா ஆகிய அணிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி நடைபெற்றது. 22 நிமிடங்கள் நடைபெற்ற இந்த போட்டியில் 2-0 என்ற புள்ளி கணக்கில் பெல்லாவிஸ்டா அணி முன்னிலையில் இருந்தது. அப்போது திடீரென மழை பெய்யத் தொடங்கியதால், போட்டியை தற்காலிகமாக நிறுத்திவிட்டு வீரர்களை மைதானத்தில் இருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டது.
வீரர்கள் மைதானத்தில் இருந்து வெளியேறிக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக அங்கு மின்னல் தாக்கியுள்ளது. இதில் 39 வயதான கால்பந்து வீரர் ஜோஸ் ஹூகோ டிலா குரூஸ் மேசா என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவருக்கு அருகில் சென்று கொண்டிருந்த கோல் கீப்பர் ஜுவான் சோக்காவுக்கு பயங்கர தீக்காயங்கள் ஏற்பட்டன. அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அணிக்கப்பட்டு வருகிறது.
மேலும், எரிக் எஸ்டிவன் செசென்டே குய்லர், ஜோஷெப் குஸ்டாவோ பரியோனா சோக்கா மற்றும் கிறிஸ்டியன் சீசர் பிடுய் கஹுவானா ஆகிய வீரர்களும் தீக்காயமடைந்த நிலையில், அவர்களுக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.