'பெரியார் பேரன் - மத்திய அமைச்சர்' - யார் இந்த ஈவிகேஎஸ் இளங்கோவன்?
உடல்நலக் குறைவு காரணமாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை பற்றி காணலாம்.
தந்தை பெரியாரின் பேரனும், சொல்லின் செல்வர் சம்பத்தின் மகனுமான ஈவிகேஎஸ் இளங்கோவன், 1948ம் ஆண்டு ஈரோட்டில் பிறந்தார். சென்னை மாநில கல்லூரியில் படிக்கும்போது மாணவரணி காங்கிரஸ் செயலாளராக இருந்த இவர், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர், நகர தலைவர், மாவட்ட தலைவர் என அடுத்தடுத்த பதவிகளை பெற்றார்.
முதல் முறையாக 1984ல் சத்தியமங்கலம் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் ஈவிகேஎஸ் இளங்கோவன். நடிகர் சிவாஜி கணேசனின் ரசிகரான ஈவிகேஎஸ் இளங்கோவன், தனது அரசியல் குருவாகவும் சிவாஜி கணேசனையே ஏற்றிருந்தார். கடந்த 1984 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் நடிகர் சிவாஜி கணேசனின் பரிந்துரையால் சத்தியமங்கலம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டார் ஈவிகேஎஸ் இளங்கோவன். அங்கு திமுக வேட்பாளரைவிட சுமார் இரு மடங்கு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.
பின்னர் 2000-ம் ஆண்டு முதல் 2002-ம் ஆண்டு வரை தமிழ்நாடு காங்கிரஸின் தலைவர் பதவியை ஈவிகேஎஸ் இளங்கோவன் வகித்தார். பின்னர், 2003-ம் ஆண்டு வரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவராகவும், 2015 முதல் 2017 வரை மீண்டும் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராகவும் பொறுப்பு வகித்தார்.
1984-ம் ஆண்டு சத்தியமங்கலம் தொகுதியில் இருந்து சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன், 2004-ம் ஆண்டு கோபிசெட்டிபாளையம் எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டு, மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சராக பொறுப்பு வகித்தார்.
அதன் பிறகு அவர் சந்தித்த தேர்தல்களில் தொடர்ந்து தோல்வியை தழுவும் நிலை ஏற்பட்டது. 2009, 2014, 2019 மக்களவை தேர்தல்களில் அவர் அடுத்தடுத்து தோல்வியடைந்தார். இதற்கிடையே, ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த தனது மகன் திருமகன் ஈ.வே.ரா. கடந்த ஆண்டு காலமானதை தொடர்ந்து, இடைத்தேர்தலில் வெற்றிபெற்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்.எல்.ஏ ஆக இருந்தார்.
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கடந்த நவ.27ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நுரையீரல் சார்ந்த பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு, மருத்துவக் குழுவினர் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.