திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம்? - விரைவில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு!
வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து மக்கள் நீதி மய்யம் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. விரைவில் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்றும், ஏப்ரல் மாதத்தில் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்த தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை அனைத்து அரசியல் கட்சிகளும் தொடங்கிவிட்டன. இதனால் நாடு முழுவதும் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்த முறை தமிழகத்தில் 4 முனைப் போட்டு இருக்கும் என்று அரசியல் வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. திமுக, அதிமுக, நாதக, பாஜக இடையே கடும் போட்டி நிலவும் என்றும் அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இவை மட்டுமல்லாமல், பாமக, அமமுக உள்ளிட்ட மற்ற அரசியல் கட்சிகளும், நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி, தேர்தலுக்கான பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன.
திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் தங்களது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், திமுக கூட்டணியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் இணைய உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
இதையும் படியுங்கள் : பிரதமர் மோடியால் உண்டான பரபரப்பு - இந்த முறை ராமநாதபுரம் தொகுதி யாருக்கு?
இதற்கிடையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சென்னை மண்டல நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நாளை நடைபெறுகிறது. பிப்ரவரி 4-ம் தேதி கோவை மண்டல நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டங்களுக்கு பின்னர், கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.