Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“பிரதமர் மோடிக்கு தமிழ்நாட்டு மக்கள் இந்த முறையும் வாக்களிக்க மாட்டார்கள்!” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

07:34 PM Jan 21, 2024 IST | Web Editor
Advertisement

பிரதமர் மோடிக்காக தமிழ்நாட்டு மக்கள் கடந்த 2 முறையும் வாக்களிக்க வில்லை. அதே போல் இந்த முறையும் தமிழ்நாட்டின் வழியில் இந்திய மக்கள் அனைவரும் முடிவெடுப்பார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தில் திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநாடு இன்று நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. திமுக இளைஞரணி மாநாட்டை கொடி ஏற்றி தொடங்கி வைத்தார். இம்மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். மாநாட்டு திடலுக்கு வருகை புரிந்த முதலமைச்சர் மற்றும் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதனை அடுத்து நடைபெற்ற மாநாட்டின் நிறைவாக திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

திமுக தோன்றி 75 ஆண்டுகளாகி விட்டது. திமுக தொடங்கியபோது இருந்த அதே எழுச்சி இன்றைக்கும் இளைஞர்களிடம் இருப்பது திமுக தலைவராக எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. மகன் தந்தைக்காற்றும் பணி என்பதை போல கட்சிப் பணி, அரசியல் பணி, அரசுப் பணி என எல்லாவற்றிலும் அமைச்சர் உதயநிதி  எனக்கு துணையாக இருக்கிறார்.

எனக்கு 30 வயதாக இருக்கும்போது இளைஞர் அணி உருவாக்கப்பட்டது.அப்போது என் மீது கலைஞர் வைத்திருந்த நம்பிக்கை போல, உதயநிதி மீது வைத்த நம்பிக்கை வெற்றி பெற வைத்து விட்டது. எந்த கொம்பனாலும் திமுகவை எதுவும் செய்து விட முடியாது என்பதை திமுக இளைஞரணி மாநாடு நிரூபித்துவிட்டது.

இளைஞர் அணி என்பது என்னுடைய தாய் வீடு. என்னை உருவாக்கிய இடம். திமுக தலைவராக, தமிழக முதலமைச்சராக அடித்தளம் இட்டதே இளைஞர் அணிதான். அதனால் எனக்கு தனிப்பாசம் உண்டு. 1980ம் ஆண்டு இளைஞர் அணி தொடங்கியது முதல் இன்று வரை போராட்டக் களங்கள், தேர்தல் பரப்புரை என எல்லா இடங்களிலும் இளைஞர் சுற்றி சுழன்று வருகின்றனர். உழைப்பு உழைப்பு என கலைஞர் பாராட்டியதற்கும், இளைஞர் அணிதான் காரணம். இளைஞர் அணியின் போர்வாள்தான் இந்த ஸ்டாலின். இளைஞர் அணியிலிருந்து எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள்,அமைச்சர்கள் வந்துள்ளனர். அதேபோன்று, நீங்களும் வருவீர்கள். வருவீர்களா. உழைப்பினால் இந்த உயரத்திற்கு நீங்கள் வரவேண்டும்.

திராவிட இயக்க வரலாறு, திமுக வரலாறு, திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் நவீன தமிழ்நாட்டின் சிற்பி கலைஞர் என்பது முழுமையாக தெரியும். தமிழ்மொழியை எதிர்க்கும் நாசகார சக்திகளை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். மாநாட்டில் பேசப்பட்ட தலைப்புகள்தான் இளைஞர் அணியினருக்கான பாடபுத்தகங்கள். அந்த தலைப்பில் பேசியவர்களை புத்தகங்கள் எழுத வையுங்கள். முன்பு 4 நாள்கள் வரை மாநாடுகள் நடக்கும். சில விஷயங்களை மாநாட்டில் தான் சொல்ல முடியும். ஆனால் இப்போது ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான மக்களிடம் கொண்டு சேர்க்க சமூக ஊடகங்கள் மூலம் முடியும்.

எல்லோர்க்கும் எல்லாம் என்ற கொள்கையில் அடிப்படையில் உருவான திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். அதற்கு இப்போது ஆபத்து வந்திருக்கிறது.

அதனால்தான் மாநில உரிமை மீட்பு மாநாட்டை நடத்துகிறோம். மொழி, பண்பாட்டை, தமிழ் மொழியை அழித்து, அடையாளத்தை அழித்து விட பாசிச பாஜக முயல்கிறது. 10 ஆண்டுகளை அதிமுக ஆட்சி சீரழித்து விட்டது. அவர்கள் ஆடும் உள்ளே வெளியே ஆட்டத்தை அதிமுகவினரே நம்பவில்லை. மாநில சுயாட்சியை பொறுத்தவரை இந்திய அரசியலமைப்பு சட்டத்தை திருத்த வேண்டும்.

நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை பாதுகாப்பதற்கான துறைகளை மட்டுமே மத்திய அரசு வைத்துக் கொண்டு விட்டு, மற்ற அனைத்து துறைகளையும் மாநிலங்களுக்கு வழங்கிட வேண்டும்.

வரும் நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்கு பிறகு, மாநில சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்ற முழக்கம் இந்தியா முழுமைக்கானதாக மாறும். தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுமைக்கும் அனைத்து மாநிலங்களில் மாநில சுயாட்சி வரும் வகையில், இந்தியா கூட்டணி வெற்றி பெற்ற பிறகு அரசியலமைப்பு சட்டம் திருத்தப்படும். மாநிலங்களை ஒட்டுமொத்தமாக ஒழித்து கட்டும் முயற்சியை பிரதமர் மோடி, பதவியேற்றது முதல் செய்து வருகிறார். எந்த சட்டம் கொண்டு வந்தாலும் மாநில அரசுகளிடம் ஆலோசனை கேட்பதில்லை. நீட், ஜி.எஸ்டி என மாநில அரசின் அதிகாரத்தை பறித்து விட்டனர். மத்திய அரசுக்கான ஏடிஎம் ஆக மாநிலங்களை மாற்றிவிட்டனர்.

பேரிடர் காலத்தில் கேட்ட நிதிக்கு ஒரு பைசா கூட கொடுக்கவில்லை. திருக்குறள் சொன்னால் போதும், பொங்கல் கொண்டாடினால் போதும், ராமர் கோவில் கட்டினால் போதும் வாக்குகள் வந்து விடும் என பாஜக நினைக்கிறது. ஆனால் இது பெரியார் மண். பிரதமராக 2 முறை பதவியேற்ற போதும் மோடிக்காக தமிழக மக்கள் வாக்களிக்க வில்லை. இந்த முறை தமிழ்நாட்டின் வழியில் இந்திய மக்கள் முடிவெடுப்பார்கள். பாஜகவுக்கு வேட்டு வைக்க ஆளுநர்கள் மட்டுமே போதும். இந்தியா கூட்டணி வெற்றி பெற்றதும் ஒற்றைக் கட்சி ஆட்சியாக இருக்காது. கூட்டணி ஆட்சியாக இருக்கும்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணியை திமுக தொடங்கி வைத்து விட்டது. பிற கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள 3 குழுக்கள் அமைக்கப்பட்டுவிட்டது. யார் வேட்பாளர், கூட்டணி யார் என்பதை நீங்கள் எங்களிடம் விட்டு விடுங்கள், அதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். யார் வெற்றி பெறுவார்களோ அவர்களுக்கு வாய்ப்பு நிச்சயம் கிடைக்கும். அடுத்த மூன்று மாத காலத்திற்கு முழுமையான வாய்ப்பை கொடுங்கள்.

இந்தியா கூட்டணி நிச்சயம் வெல்லும். இதுதான் சேலத்தில் இருந்து இந்தியாவிற்கு சொல்லும் செய்தி

உதயநிதி மட்டுமல்ல இளைஞரணியினர் அனைவருமே என்னுடைய மகன்தான். உங்களால் லட்சக்கணக்கானோரின் பலத்தை பெற்று விட்டேன். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

Tags :
திமுக இளைஞர் அணி மாநாடுCMO TamilNaduDMK Youth WingDMK Youth Wing ConferenceDMK YW4 State RightsKanimozhiMK Stalinnews7 tamilNews7 Tamil UpdatesSalemTamilNaduUdhayanidhi stalinYouth wing conference
Advertisement
Next Article