“பரந்தூர் மக்களே, நம்பிக்கையோடு இருங்கள்” - தவெக தலைவர் விஜய் பதிவு!
சென்னை மாநகரில் இரண்டாவது பெரிய விமான நிலையம் அமைக்க பரந்தூரில் 13 கிராமங்களை உள்ளடக்கிய 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தை அரசு தேர்வு செய்தது. இதற்கிடையே அங்குள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தங்களில் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக கூறி தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர்.
போராட்டகாரர்களுக்கு நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட பல கட்சிகள் ஆதரவு தெரிவித்தது. தொடர்ந்து தமிழ்நாடு அரசு மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பரந்தூர் விமான நிலையம் அமைக்கப்படும் என விளக்கம் கொடுத்திருந்தது. விமான நிலையத்திற்கான நிலம் கையகப்படுத்துவதில் அரசு முனைப்பு காட்டி வரும்சூழலில் பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிரான போராட்டம் இன்றுடன் 1,000வது நாளை எட்டியுள்ளது.
இந்த நிலையில் பரந்தூர் மக்களே நம்பிக்கையாக இருங்கள் நாளை நமதே என போராட்டகாரர்களுக்கு தவெக தலைவர் விஜய் மீண்டும் ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “மண்ணுரிமைக்காக, வாழ்வுரிமைக்காக ஆயிரம் நாட்களைக் கடந்து அறப் போராட்டம் நடத்தி வரும் என் பாசத்துக்குரிய பரந்தூர் மக்களே, நம்பிக்கையோடு இருங்கள், நாளை நமதே”
இவ்வாறு தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.