#Pongal பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு படையெடுத்த மக்கள்… ஸ்தம்பித்த ஊரப்பாக்கம் GST சாலை!
பொங்கல் விடுமுறைக்காக சென்னையில் இருந்து அதிகளவிலான மக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதால் ஊரப்பாக்கம் GST சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சென்னை, கோவை போன்ற நகரங்களில் கல்வி, வேலை உள்ளிட்ட காரணங்களுக்காக தங்கி இருப்பவர்கள் பொங்கல், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அந்த வகையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர்.
பொதுமக்களின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காகவும் அரசு சிறப்பு பேருந்து மற்றும் ரயில்களை இயக்கி வருகிறது. இருப்பினும் கூட்ட நெரிசலை கணக்கில் கொண்டு பெரும்பாலானோர் தங்கள் இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மூலம் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர்.
ஏராளமான சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில் அதிகமானோர் சொந்த வாகனங்களில் செல்லும் காரணத்தால் ஊரப்பாக்கம், கிளாம்பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலினால் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்கின்றனர். போலீசார் போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.