மக்களே உஷார்; வெள்ள அபாய எச்சரிக்கை!
சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 28,784 கன அடியிலிருந்து 31,500 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால், அணை தொடர்ந்து தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. நடப்பு ஆண்டில் மேட்டூர் அணை மூன்றாவது முறையாக 120 அடி முழு கொள்ளளவை எட்டியுள்ளது
தற்போது, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120.00 அடியாகவும், நீர் இருப்பு 93,47 டி.எம்.சி-யாகவும் உள்ளது. அணைக்கு வரும் நீர்வரத்து முழுவதுமாக வெளியேற்றப்பட்டு வருகிறது.
அணையிலிருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 31,000 கன அடியும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 500 கன அடி நீரும் வெளியேற்றப்படுகிறது.
மேட்டூர் அணையிலிருந்து 16 கண் மதகு வழியாக உபரி நீர் வெளியேற்றப்படுவதால், காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளான தங்கமாபுரி பட்டினம், சேலம் கேம்ப், அண்ணா நகர், பெரியார் நகர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொது மக்களுக்கு வருவாய் துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் ஆற்றில் குளிப்பது, நீச்சல் அடித்தல், துணி துவைப்பது, மற்றும் புகைப்படம் எடுப்பதுபோன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபட வேண்டாம் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அணை மற்றும் ஆற்றுப் பகுதிகளில் இருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.