மக்களே தங்கம் வாங்க ரெடியா?... 13 நாட்களில் சவரனுக்கு ரூ.4160 குறைவு!
தீபாவளிக்குப் பின் 13 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு 4160 ரூபாய் குறைந்துள்ளது.
தங்கம் விலை அவ்வப்போது ஏறுவதும், இறங்குவதும் உண்டு. விலை ஏறினாலும், இறங்கினாலும் நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் கூடிக் கொண்டுதான் இருக்கிறது. 20 வருடங்களுக்கு முன்பு ரூ.5 ஆயிரத்திற்கு விற்கப்பட்ட தங்கம் தற்போது ரூ.60 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை குறைந்து வருகிறது. தீபாவளியைத் தொடர்ந்து தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்து வருகிறது. கடந்த 13 நாட்களில் மட்டும் சவரனுக்கு 4160 ரூபாய் குறைந்துள்ளது.
இதனால் நடுத்தர மக்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். தீபாவளியில் இருந்து நாள் தோறும் 300 ரூபாய் முதல் 1200 ரூபாய் வரை தங்கம் விலை குறைந்தது. நேற்று தங்கம் கிராமுக்கு ரூ.40 குறைந்து, ரூ.7,045க்கும், ஒரு சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ. 56,360க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.110 குறைந்து ரூ.6935க்கும், சவரனுக்கு ரூ.880 குறைந்து ரூ. 55,480க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதுபோல 18 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.90 குறைந்து ரூ.5,720க்கும், சவரனுக்கு ரூ.720 குறைந்து ரூ.45,760க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராமுக்கு ரூ.2 குறைந்து ஒரு கிராம் ரூ.99க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.99,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.