ரூ.1.7 கோடியை மீட்க உதவிய ‘பென்னி’ எனும் மோப்ப நாய்! குவியும் பாராட்டுகள்!
குஜராத்தில் ரூ.1 கோடி பணத்தை திருடிய திருடர்களை கண்டுபிடித்த ‘பென்னி’ எனும் மோப்ப நாய்க்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றது.
குஜராத் மாநிலம் அஹமதாபாத் மாவட்டம், தோல்கா தாலுகாவில் உள்ள சரக்வாலா கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி உதேசின் சோலங்கி (52). இவர் சமீபத்தில் லோதல் தொல்லியல் பகுதிக்கு அருகில் உள்ள தனது நிலத்தை விற்று அதில் கிடைத்த பணத்தை வீட்டில் வைத்துள்ளார். இந்நிலையில் ஒருவேளை காரணமாக உதேசின் வெளியூர் சென்றுள்ளார். இச்சூழலில் கடந்த 12ஆம் தேதி வீட்டில் வைத்திருந்த ரூ.1.07 கோடி பணத்தை மர்ம நபர்கள் திருடியுள்ளனர்.
வீட்டிற்கு திரும்பி வந்த உதேசின் பணம் திருடு போனதை அறிந்து, அதிர்ச்சியடைந்த அந்த விவசாயி, இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் எஃப்ஐஆர் பதிவு செய்த போலீசார், ‘பென்னி’ எனும் டாபர்மேன் மோப்ப நாய் மற்றும் அதன் உரிமையாளர் உட்பட 19 பேர் கொண்ட குழுவை அமைத்து விசராணையை தொடங்கினர். சந்தேகத்தின் பேரில் 30 பேரிடம் போலீசார் முதற்கட்டமாக விசாரணை நடத்தியுள்ளனர்.
இதனையடுத்து வீடு, திருடர்கள் சென்ற வழி என பென்னியை வைத்து போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பணம் வைத்திருந்த பைகளில் ஒன்றை கொள்ளையர்கள் விட்டுச் சென்றுள்ளனர். அதை மோப்பம் பிடித்த பென்னி, 4 முதல் 5 நபர்களை அடையாளம் காட்டியுள்ளது. அதில் குறிப்பாக புத்த சோலங்கி என்பவர் வீட்டின் முன்பு போய் நின்றுள்ளது. இதனையடுத்து புத்தாவிடம் விசாரித்ததில், அவர்தான் பணத்தை எடுத்துக்கொண்டார் என்பதை ஒப்புக் கொண்டுள்ளார்.
கொள்ளையரான புத்த சோலங்கி உதேசின் நெருங்கிய நண்பர் என விசாரணையில் தெரியவந்துள்ளது. உதேசி நிலம் விற்று வீட்டில் பணம் வைத்திருந்ததை அறிந்த அவர், தனது கூட்டாளி விக்ரம் சோலங்கி என்பவருடன் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுப்பட்டுள்ளார். ஒரு பையில் ரூ.1 கோடியும், மற்றொரு பையில் ரூ.7.8 லட்சமும் இருந்துள்ளது. இதனை எடுத்த இருவரும் ஒரே பையில் மொத்த பணத்தையும் எடுத்துக் கொண்டு, மற்றொரு பையை அங்கேயே விட்டுச் சென்றுள்ளனர்.
இதனை மோப்பம் பிடித்த ‘பென்னி’ திருடர்களை கண்டுபிடித்துள்ளது. உதேசின் வீடு பழைய காலத்து வீடு என்பதால், அதை உடைப்பது பெரிய விஷயமில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். ஜன்னல் வழியாக குதித்து இந்த திருட்டு சம்பவத்தில் இருவரும் ஈடுபட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் திருடர்களை கண்டறிய உதவிய ‘பென்னி’க்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.