அமைச்சரவைப் பட்டியலில் முதலிடத்தில் பவன் கல்யாண் - ஆந்திராவின் துணை முதலமைச்சராக வாய்ப்பு!
அமைச்சரவைப் பட்டியலில் முதலிடத்தில் பவன் கல்யாண் உள்ளதால் அவர் ஆந்திர மாநில துணை முதலமைச்சராக பதவியேற்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப் பேரவை மற்றும் மக்களவை தேர்தலில் தெலுங்கு தேசம், ஜனசேனா, பாஜக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. 175 பேரவை தொகுதிகளில் 164 தொகுதிகளையும், 25 மக்களவைதொகுதிகளில் 21 தொகுதிகளிலும் தெலுங்கு தேசம் கூட்டணி வெற்றி பெற்றது.
தேர்தல் வெற்றியை உறுதி செய்ததில் ஜனசேனா கட்சி தலைவரும், நடிகருமான பவன் கல்யாணுக்கு பெரும் பங்குண்டு. இவருக்கு வழங்கிய 21 சட்டப்பேரவை தொகுதி மற்றும் 2 மக்களவை தொகுதிகளிலும் தான் உட்பட தனது கட்சி வேட்பாளர்கள் அனைவரையும் வெற்றிபெற செய்துள்ளார்.
இன்று சந்திரபாபு நாயுடு ஆந்திர முதலமைச்சராக பதவியேற்க உள்ள நிலையில் அவரது தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள நபர்கள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவிற்கு பிறகு பவன் கல்யாண் முதலாவதாக பட்டியலில் இடம்பெற்றுள்ளார். இதன் மூலம் அவர் துணை முதலமைச்சராக பதவியேற்க வாய்ப்புள்ளது. இதனைத் தொடர்ந்து சந்திர பாபுவின் மகனும் கட்சியின் பொதுச்செயலாளருமான நாரா லோகேஷ் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார்.