சனாதனம் குறித்த பேச்சு - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆஜராக பாட்னா நீதிமன்றம் சம்மன்!
சனாதனம் குறித்து பேச்சுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆஜராக பாட்னா நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் சார்பில் சென்னை காமராஜர் அரங்கில் கடந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் ‘சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார்.
இது குறித்து அமைச்சர் உதயநிதிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன. வினித் ஜிண்டால் என்பவரும் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதன் பின்னர் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ” சனாதனம் குறித்து நான் பேசியது, பேசியது தான். நான் மன்னிப்பு கேட்க வேண்டுமென்று சொன்னார்கள். நான் மன்னிப்பு கேட்க மாட்டேன். நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை உள்ளது. எது வந்தாலும் சட்டரீதியாக சந்தித்து கொள்வோம். நான் எந்த ஒரு மதத்தையும் இழிவுபடுத்தி பேசவில்லை “ என திட்டவட்டமாக தெரிவித்தார்.
அமைச்சர் உதயநிதியின் பேச்சு இந்துகளின் உணர்வுகளை புண்படுத்தியதாக வழக்கறிஞர் கவுசலேந்திர நாராயணன் செப்டம்பர் 4ஆம் தேதி வழக்கு தொடர்ந்திருந்த நிலையில் பிப்ரவரி 13-ல் உதயநிதி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.