தனியார் பேருந்தை சிறை பிடித்த பயணிகள் - நிறுத்தத்தில் நிற்காததால் ஆத்திரம்!
திருவண்ணாமலை வேலூர் நெடுஞ்சாலையில் உள்ள கண்ணமங்கலம் அருகே, வாழியூர் கூட்டுரோடு பேருந்து நிறுத்தம் அமைந்துள்ளது. இப்பகுதியை சுற்றியுள்ள வாழியூர், புத்தூர், ஆண்டிபாளையம், அனந்தபுரம், அய்யம்பாளையம், மேல் நகர், காந்திநகர் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஏராளமான பயணிகள் திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு, வாழியூர் கூட்டுரோடு பேருந்து நிறுத்தத்தில் இருந்து பேருந்து மார்க்கமாக பயணித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று வாழியூர் கூட்டுரோடு பேருந்து நிறுத்தத்தில் சில பேருந்துகள் நிற்காமல் சென்றுள்ளன. இதனால் அப்பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.
அடுத்ததாக வேலூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த மற்றொரு தனியார் பேருந்தும் நிறுத்தத்தில் நிற்காமல் சென்றுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் சில இளைஞர்கள், நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனங்களை நிறுத்தி, பேருந்து செல்ல முடியாதபடி செய்தனர்.
இதனால் பேருந்தில் பயணித்த பயணிகள் செய்வதறியாது தவிக்கும் நிலை உருவானது. இதனை தொடர்ந்து இளைஞர்கள் அப்பேருந்து ஓட்டுனரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.