புதிய தாழ்தள பேருந்துகளில் போதிய காற்று வருகிறதா? பயணிகள் கூறுவது என்ன?
சென்னை மாநகர பேருந்துகளில் புதிதாக பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ள தாழ்தள பேருந்துகளில் காற்று வராததால் பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
சென்னையில் உள்ள 17 வழித்தடங்களில் மொத்தம் 58 தாழ்தள பேருந்துகள் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டன. குறிப்பாக முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் எளிதாக பயணிக்கும் வகையில் இதன் கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மத்தியில் இப்பேருந்துகளுக்கு மிகுந்த வரவேற்பு உள்ளது.
இப்பேருந்துகளில் குளிர்சாதன வசதி இல்லை என்றாலும், குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகள் போன்றே இதன் கட்டமைப்பு நவீன தொழில்நுட்பத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பேருந்தில், வழித்தடத்தை தெரிவிக்கும் டிஜிட்டல் போர்டு, தானியங்கி கதவுகள், தானியங்கி கியர் வசதி, மாற்றுத்திறனாளிகள், அமர்வதற்காக விசாலமான இடத்துடன் கூடிய இருக்கைகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன.
மேலும், பேருந்தின் என்ஜின் வழக்கமான பேருந்துகளில் இருப்பது போல இல்லாமல், பின்பக்கத்தில் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் பின்பக்க இருக்கைகள் சற்று உயர்வான இடத்தில் உள்ளது. நவீன வசதிகளுடன் இப்பேருந்து கட்டமைக்கப்பட்டிருந்தாலும், இப்பேருந்தில் போதிய அளவு காற்றோட்டம் இல்லை என பயணிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக கடைசி இரண்டு வரிசைகளில் உள்ள இருக்கைகளில் அமர்ந்து செல்லும் பயணிகள் வெளிக்காற்று கிடைக்காததால், பெரும் சிரமத்துடன் பயணிப்பதாக புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அப்பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் கூறியது:
புதிய தொழில்நுட்பங்களுடன் இப்பேருந்து கட்டமைக்கப்பட்டிருந்தாலும், கடைசி வரிசை இருக்கைகளுக்கான ஜன்னல் சிறிய அளவில் உள்ளது. இதனால் வெயில் நேரங்களில், குறிப்பாக மதியம் மற்றும் நெரிசல் மிகுந்த நேரங்களில் கடுமையான வெப்பத்தை பேருந்தின் உள்ளே உணர முடிகிறது. வெளிக்காற்று பேருந்தின் உள்ளே வருவதில் மிகுந்த சிரமம் உள்ளது.
அதிலும் நின்று கொண்டு பயணிப்பது மேலும் சிரமத்தை தருகிறது. இதுபோன்ற குளிர்சாதன வசதி இல்லாத பேருந்துகள் பெங்களூர் போன்ற வெப்பம் குறைவான நகரங்களுக்கு பொருத்தமானதாக இருக்கும். ஆனால், குறைந்தது 80 முதல் அதிகபட்சமாக 104 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் வாட்டி வதைக்கும் சென்னையில் இப்பேருந்தில் பயணிப்பது பெருத்த சிரமத்தை தருகிறது. இதனால், காற்று உள்ளே வந்து வெளியே செல்லும் வகையில் இதன் கட்டமைப்பில் சிறிது மாற்றத்தை ஏற்படுத்தினால் மிகவும் சிறப்பாக இருக்கும் என்றனர்.
இது குறித்து மாநகர போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறும்போது, ‘இது குறித்து ஆய்வு செய்து பிரச்னை சீர் செய்யப்படும்’ என தெரிவித்தனர்.