ஜப்பானில் தீப்பற்றி எரியும் விமானத்தில் இருந்து வெளியேறிய பயணிகள் - பரபரப்பு வீடியோ!
ஜப்பான் ஹனேடா விமான நிலையத்தில் பயணிகள் விமானம், கடலோரக் காவல்படை விமானத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. காவல்படை விமானத்தில் இருந்த 5 பேர் உயிரிழந்ததாக தகவல் கிடைத்துள்ளது.
ஜப்பானில் பயணிகள் விமானம் தரையிறங்கும் போது ஓடுபாதையில் நின்றிருந்த கடலோரக் காவல்படை விமானம் மீது மோதியதும் பயணிகள் அச்சம் அடைந்தனர். உடனடியாக விமானத்தில் தீப்பிடித்து எரிந்தது. ஜப்பானில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட நிகாடாவுக்கு ஹனேடாவிலிருந்து நிவாரணப் பொருள்களை ஏற்றிக் கொண்டு செல்லத் தயாராக இருந்த கடலோரக் காவல்படை விமானத்தின் மீதுதான் இந்த பயணிகள் விமானம் மோதியிருக்கிறது.
ஹனேடா விமான நிலையம், ஜப்பானில் அதிகம் பேரால் பயன்படுத்தப்படும் விமான நிலையமாகும். ஆனால், நல்வாய்ப்பாக ஜப்பான் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், தீ முழுமையாக பற்றுவதற்குள், அதிலிருந்த அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் என்ற தகவல்கள் கிடைக்கப்பெற்றது. பயணிகள் 379 பேரும் பத்திரமாக வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
எனினும் இந்த விபத்தில், ஜப்பானின் கடலோரக் காவல்படை விமானத்தின் விமானி மட்டும் வெளியே குதித்து உயிர் தப்பியதாகவும், அதில் இருந்த 5 பேரும் சடலமாக மீட்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பலரும் புத்தாண்டுக் கொண்டாட்டங்களை முடித்துக்கொண்டு இன்று இந்த விமான நிலையத்தில் குவிந்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஜப்பானில், புத்தாண்டு பிறப்பன்று பயங்கர நிலநடுக்கமும், அதனைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்த நிலையில், இன்று பயணிகள் விமானம் விபத்தில் சிக்கியது, அந்நாட்டு மக்களை கலக்கத்தில் ஆழ்த்தியிருக்கிறது.