வக்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு நாடாளுமன்ற கூட்டுக்குழு ஒப்புதல்!
வக்பு சொத்துக்களை ஒழுங்குபடுத்துதல் மற்றும் நிர்வகிப்பதில் உள்ள சிக்கல்களை களைவதற்காக வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா உருவாக்கப்பட்டது. இதற்காக வக்பு சட்டம்-1995ல் திருத்தங்கள் செய்யப்படுகின்றன. இந்த மசோதாவை மக்களவையில், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தாக்கல் செய்தார்.
இந்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இஸ்லாமியர்களின் உரிமையை பறிக்கக் கூடிய வகையில், வக்பு சொத்துகள் அனைத்தும் ஆட்சியர் அலுவலகத்தில் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றிருப்பதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இதனையடுத்து, மசோதா, நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. இந்தக் கூட்டுக் குழுவில் திமுகவின் ஆ.ராசா, அப்துல்லா உள்ளிட்ட எம்பிக்களும் இடம் பெற்றிருந்தனர். அதன்படி ஜெகதாம்பிகா பால் தலைமையிலான கூட்டுக்குழு உறுப்பினர்கள் இந்த மசோதாவின் அம்சங்கள் தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தினர்.
இந்த நிலையில், வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு நாடாளுமன்ற கூட்டுக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதா மீது எதிர்க்கட்சிகள் தரப்பில் தரப்பட்ட 572 திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அதேநேரத்தில் மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் 14 திருத்தங்கள் ஏற்கப்பட்டுள்ளன. இதற்கும் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.