பாரீஸ் ஒலிம்பிக் 2024 | தொடங்கியது ஒலிம்பிக் தீப தொடர் ஓட்டம்!
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியை முன்னிட்டு ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டு, ஒலிம்பிக் ஓட்டம் தொடங்கியது.
33-வது ஒலிம்பிக் விளையாட்டு போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஜூலை 26-ந்தேதி முதல் ஆகஸ்டு 11-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதில் 200 நாடுகளைச் சேர்ந்த 10,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். போட்டிக்கான 'கவுண்டவுன்' தொடங்குவதை குறிக்கும் வகையில் ஒலிம்பிக் பிறந்த இடமான கிரீஸ் நாட்டின் ஒலிம்பியாவில் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்படுவது நெடுங்காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான ஒலிம்பிக் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி ஒலிம்பியாவில் நேற்று (ஏப்.17) நடைபெற்றது. வழக்கமாக சூரிய ஒளியை குவிலென்சின் மையத்தில் விழச் செய்து, அதில் இருந்து உருவாகும் வெப்பத்தில் இருந்து ஒலிம்பிக் தீபம் ஏற்றப்படும். ஆனால் நேற்று ஒலிம்பியாவில் மேகமூட்டமாக இருந்ததால் சூரியஒளியை பார்க்க முடியவில்லை. வானிலை குறித்து முன்கூட்டியே கணிக்கப்பட்டு இருந்ததால் அதற்கு ஏற்ப மாற்று ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தது.
கிரீஸ் நாடு முழுவதும் 5 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் தீபம் பயணிக்கிறது. அது முடிந்து வருகிற 26-ந்தேதி பாரீஸ் ஒலிம்பிக் கமிட்டியிடம் தீபம் ஒப்படைக்கப்படும். பின்னர் ஒலிம்பிக் தீபம் பிரான்சுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு 400 நகரங்களில் தொடர் ஓட்டம் நடைபெறுகிறது. இங்கு ஏறக்குறைய 10 ஆயிரம் பேரின் கைகளில் தீபம் தவழ இருக்கிறது. இறுதியில் தொடக்க விழா நடைபெறும் பாரீசுக்கு கொண்டு வரப்பட்டு அங்குள்ள மெகா கொப்பரையில் தீபம் ஏற்றப்பட்டதும் போட்டி தொடங்கும்.