பாரிஸ் ஒலிம்பிக் | அயர்லாந்தை வீழ்த்தியது இந்திய ஹாக்கி அணி!
பாரிஸ் ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற ஆடவருக்கான ஹாக்கி போட்டியில் 2-0 என்ற கணக்கில் அயர்லாந்தை வீழ்த்தியது இந்திய அணி.
சர்வதேச அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் மிக முக்கியமானது, ஒலிம்பிக் போட்டியாகும். 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இப்போட்டிகள், இந்த முறை பாரிஸ் நகரில் கடந்த 26ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இப்போட்டிகள் ஆகஸ்ட் 11ம் தேதி வரை 17 நாட்கள் நடைபெறவுள்ளது. பாரிஸில் நடைபெறும் 33வது ஒலிம்பிக்ஸ் போட்டியில் 200 நாடுகளைச் சேர்ந்த 10,500 க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
இந்த நிலையில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஹாக்கி ஆட்டத்தில் இந்திய அணி அயர்லாந்தை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமாக செயல்பட்ட இந்தியா 2-0 என்ற கோல் கணக்கில் அயர்லாந்தை வீழ்த்தி இந்த தொடரில் தனது 2வது வெற்றியை பதிவு செய்தது. இந்தியா தரப்பில் ஹர்மன்ப்ரீத் சிங் 2 கோல் (11 மற்றும் 19வது நிமிடம்) அடித்தார்.
பாரீஸ் ஒலிம்பிக்கில் ஆண்கள் ஹாக்கி போட்டியில் 12 அணிகள், இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. குரூப் போட்டிகளில் அணிகள் ஒருவொரு அணியும் மற்ற அணியுடன் ஒருமுறை மோதும். மேலும், ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு முன்னேறும். காலிறுதி போட்டிகள் ஆகஸ்ட் 4-ஆம் தேதி நடைபெறுகின்றன. அரையிறுதிப் போட்டிகள் ஆகஸ்ட் 6-ஆம் தேதியிலும், பதக்கச் சுற்று ஆட்டங்கள் ஆகஸ்ட் 8 ஆம் தேதியும் நடைபெற உள்ளன.