எமனேசுவரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி திருவிழா - விமரிசையாக நடைபெற்ற கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம்!
பரமக்குடியில் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, பூப்பல்லக்கில் நீல நிற பட்டுடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே எமனேஸ்வரத்தில் வரதராஜ பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டும் வைகாசி பிரம்மோற்சவ விழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பின்னர், வைகாசி பிரம்மோற்சவ விழா 10 நாட்கள் திருவிழாவாக நடைபெற்று வருகிறது. இதன் முக்கிய நிகழ்ச்சியாக வரதராஜ பெருமாள் கள்ளழகர் வேடமணிந்து வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவம் இன்று (மே - 23) அதிகாலை நடைபெற்றது.
இதையும் படியுங்கள் : மஞ்சும்மல் பாய்ஸ் பட நிறுவனத்துக்கு இளையராஜா நோட்டீஸ்!
இன்று அதிகாலை 4.00 மணியளவில் பெருமாள் நீல நிற பட்டுத்தி கள்ளழகர்
வேடமணிந்து கிண்ணத்தில் தயிர்சாதம் சாப்பிட்டு பல்வேறு மலர்களால்
அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் எழுந்தருளி கோயிலில் இருந்து புறப்பட்டார். இதில், வாணவேடிக்கைகள் முழங்க ஏராளமான தீவட்டி வெளிச்சத்தில் அதிகாலை 5.30 மணியளவில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
இந்த விழாவை காண ஏராளமான பக்தர்கள் வைகை ஆற்றில் திரண்டனர். கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் போது, அங்கு கூடியிருந்த பொதுமக்கள் கோவிந்தா, கோவிந்தா என கோஷமிட்டு கள்ளழகரை தரிசித்தனர்.