#Paralympics2024 | மகளிர் #Badminton போட்டியில் வெள்ளி, வெண்கல பதக்கங்கள்… தட்டித்தூக்கிய தமிழக வீரமங்கைகள்!
பாரிஸ் பாராலிம்பிக்ஸ் மகளிர் ஒற்றையர் பேட்மிண்டனில் தமிழக வீராங்கணைகளான துளசிமதி வெள்ளி பதக்கமும், மணிஷா ராதாஸ் வெண்கல பதக்கமும் பெற்றனர்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 17-வது பாராலிம்பிக் தொடர் கடந்த 28-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகள் செப்.8-ம் தேதி வரை என மொத்தம் 11 நாட்கள் நடைபெறுகின்றன. இதில் 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில் 32 பெண்கள் உட்பட 84 பேர் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இதுவரை இந்தியா 2 தங்கம், 3 வெள்ளி, 5 வெண்கலம் உட்பட 10 பதக்கங்களை பெற்றுள்ளது.
இந்நிலையில் இன்று பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் SU5 பிரிவில் இறுதிப் போட்டியில் சீன வீராங்கனை யாங்கை எதிர்த்து தமிழ்நாட்டைச் சேர்ந்த துளசிமதி முருகேசன், இறுதிப் போட்டியில் 21-17, 21-10 என்ற புள்ளி கணக்கில் தோல்வியை தழுவினார். இறுதிப் போட்டியில் துளசிமதி தோல்வியை தழுவினாலும், 2ம் இடம் பிடித்த அவருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. இதன் மூலம் இந்தியாவுக்கு நடப்பு ஒலிம்பிக்கில் 11வது பதக்கம் கிடைத்துள்ளது. இவர் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்.
அதேபோல், வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த மனிஷா ராமதாஸ், டென்மார்க் வீராங்கனை கேத்ரின் ரோசன்கிரனை நேர் செட்களில் தோற்கடித்து வெண்கலம் வென்றார். இதன்மூலம் இந்தியாவிற்கு 12வது பதக்கம் கிடைத்தது. பெண்கள் ஒற்றையர் பேட்மிண்டன் போட்டியில் வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை இந்தியாவின் தமிழ்நாட்டை சேர்ந்த இரண்டு வீராங்கணைகள் வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.